Monday, September 5, 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டால் மகிழ்வேன்- கார்த்திகேயன்!

Monday,September,05,2011
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன்,முருகன், சாந்தன் ஆகியோரது தண்டனை குறைக்கப்படுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுப் படையின் தலைவரும், முன்னாள் சிபிஐ இயக்குநருமான டி. கார்த்திகேயன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. நான் எனது கடமையை செய்தேன். தற்போது அரசாங்கம் தனது கடமையை செய்யட்டும். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினியின் தண்டனை ஏற்கனவே குறைக்கப்பட்டு இருப்பதால், தூக்கு தண்டனை பெற்ற மற்ற 3 கைதிகளும் தங்கள் தண்டனையை குறைக்க கோருவதற்கு உரிமை இருக்கிறது. மேலும் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள். அத்தோடு அவர்களின் கருணை மனு மீது முடிவு எடுக்க 11 ஆண்டு காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அப்போது இருந்த சிபிஐ உயர் அதிகாரிகள், ஐபி உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகள் தயக்கம் காட்டி பின்வாங்கினர். இந்த நிலையில் விசாரணை நடத்த வேண்டும் என கார்த்திகேயனுக்கு சிபிஐ கோரிக்கை விடுத்தது. அப்போது அவர் சிஆர்பிஎப்பின் தலைவராக இருந்து வந்தார். அரசியல் குறுக்கீடு கூடாது, விசாரணையின்போது சித்திரவதை உள்ளிட்டவற்றை பிரயோகப்படுத்தக் கூடாது என்ற இரு நிபந்தனைகளின் பேரில் விசாரணைக்கு தலைமையேற்றார் கார்த்திகேயன். இதை அவரை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்ற தொணியில் அவர் கருத்து தெரிவித்திருப்பது அவர்களின் தண்டனைக் குறைப்புக்காக போராடி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு புது உற்சாகத்தை அளிக்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment