Friday, September 16, 2011

இந்திய மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - அமெரிக்கா

Friday, September 16, 2011
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த இந்திய மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் பிளேக் இந்தியாவில் இதனைக் குறிப்பிட்டதாக சன் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா திரும்பும் போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரொபேட் பிளேக் இந்தியா சென்றுள்ளார்.

புதுடில்லியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே பிளேக் இந்தக் கருத்தினை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தழிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தாமதிக்க கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு போன்றவற்றில் மேலும் பல விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் கருத்தெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு வழங்கினால் மட்டுமே தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தை நம்புவார்கள் எனவும் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளார் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நிவாரண பணிகளை உடனடியாக தொடருமாறு இலங்கை அரசுக்கும் இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ரொபேட் பிளேக் வலியுறுத்தியதாக சன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment