Friday, September 23, 2011

தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நல்லிணக்க ஆணைக்குழு செயற்பட வேண்டும்!

Friday 23rd of September 2011
ஐநா நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் நியமித்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.

நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் பொதுநலவாய அமைப்பு நாடுகள் கூட்டத்தொடரில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பொதுநலவாய அமைப்பு நாடுகள் கடந்த இரண்டு வருடங்களாக அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல துறை அதிகாரி லின் பெஸ்கோ மற்றும் செயலாளர் பான் கீ மூனின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜய் நம்பியார் ஆகிய இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கொஹனவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லி்ன் பெஸ்கோவுடனான சந்திப்பு பயனுடையதாக அமைந்ததாக சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தமக்கு விளக்கமளித்ததாக லின் பெஸ்கோ இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment