Wednesday, September 14, 2011

துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்-ரொபர்ட் ஓ பிளேக்!

Wednesday,September 14,2011
தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு காணுவம் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை அரசாங்கமும் தொடர்ந்து பேச்சு நடத்த விருப்பம் கொண்டிப்பதையிட்டு தான் மகிழ்ச்சிகொள்வதுடன், உற்சாகமடைவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்படவேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இதற்காக தமிழ் பொலிஸாரை அங்கு பணியில் ஈடுபடுத்தவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தின் இறுதி அம்சமாக இன்று காலை கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து போதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

இன்றைய செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டதாவது:

இலங்கைக்கு மீண்டும் வருகைதந்ததையிட்டும் பழைய நண்பர்களைக் காணக்கிடைத்ததையிட்டும் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த இரு தினங்களாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பரந்தளதவிலான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ், ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொழும்பில் நான் சந்தித்திருந்தேன். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு யாழ் இராணுவத் தளபதி, அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களையும் நான் சந்தித்திருந்தேன்.

ஊடக சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கும் விஜயம் செய்திருந்;தேன். 2009ம் ஆண்டு மே மாதத்தில் நான் புறப்பட்டுச் சென்றதை விடவும் இந்நாடு மிகவும் மாறுபட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் அனேகர் மெனிக் பாமில் இருந்து சென்றுள்ளனர். ஏனையோர் மிதிவெடி அகற்றல் பூர்த்தியானவுடன் அங்கிருந்து புறப்படுவர். வடக்கில் முக்கியமான உள்ளுராட்சித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 8000ற்கு அதிகமான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் மிதிவெடிகளை அகற்றுவது தொடர்பிலும் கணிசமான பணிகள் இடம்பெற்றுள்ளன. வடக்கு மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கும் வழமை நிலைமைக்குக் கொண்டுவருவதற்கும் துணைபுரியும் வகையில் அமெரிக்கா அதன் உதவித்திட்டங்களை முன்னுரிமைப்படுத்தியுள்ளது.

வடக்கு கிழக்கில 20,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக தனியார் துறையினருடன் இணைந்து 202 கோடி இலங்கை ரூபாவை நாம் முதலீடு செய்கின்றோம். இடம்பெயர்ந்தவர்களும் ஏனையோரும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல வசதியாக மிதிவெடியகற்றும் பணிகளுக்கு தொடர்ச்சியாக நாம் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றோம். வடக்கில் இடைத்தங்கல் வீடுகளை அமைப்பதற்காக கடந்த வருடத்தில் 15.4 கோடி இலங்கை ரூபாவை நாம் பங்களிப்புச்செய்துள்ளோம்.

உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பிரதான பங்களிப்பாளர்களாக விளங்குகின்ற நாம் கடந்த 12மாதங்களில் 55 கோடி இலங்கை ரூபாவை வழங்கியுள்ளோம். இருந்தபோதிலும் சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்துடன் கூடிய இலங்கையை உறுதி செய்து கொள்வதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதற்கும் இன்னனும் பெருமளவு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

அதிகாரப்பகிர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கத் தரப்பிலிருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தும் அறியக்கிடைத்ததையிட்டு முதலில் நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

அடுத்ததாக நிபுணர் குழு அறிக்கையினை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைப்பதான அறிவிப்பினையும் சர்வதேச மனிதாபினமான சட்டங்களை மீறியவர்களுக்கு எதிரான பொறுப்புக்கூறும் கடப்பாடு முழுமையானதும் சுயாதீனமானதும் நம்பத்தகுகந்ததுமான பொறுப்புக்கூறுல் ஆகியவற்றை உள்ளடக்கியதான முழுமையான தேசிய நல்லிணக்க நடைமுறைக்கான தேவையை ஐநா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்திநிற்கின்றது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கவனம் செலுத்தும் என நாம் நம்புகின்றோம். இறுதியாக, மனித உரிமைகளையிட்டு நான் கரிசனை கொண்டுள்ளேன்.

நல்லிணக்க செயற்பாடுகளிலும் வடக்கில் மீளத்திரும்பிச்செல்கின்ற மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதிலும் மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் காணப்படவேண்டியது மிகவும் முக்கியமானதொரு பாகமாக விளங்குகின்றது. துணை இராணுவப் படைத்தரப்பினரின் ஆயுதங்களைக் களைவதன் அவசியம் தொடர்பாக நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். இந்த விடயத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

மர்ம மனிதர்கள் தொடர்புடைய சம்பவங்களுக்கும் முடிவுகாணப்பட வேண்டியது அவசியமாகும். இந்த விடயம் பாதுகாப்புத் தொடர்பான நிச்சயமற்றதன்மை அதிகரித்துச் செல்லக் காரணமாகியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் பலர் என்னிடம் எடுத்துககூறினர். வடக்கில் தமிழ் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த வேண்டியது அவசியமாகும். அப்படியானால் இவ்வாறான பணிகளை மேற்கொள்வதற்கான தேவை இராணுவத்தினருக்கு இனிமேலும் ஏற்படாது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களையிட்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்றது என்றும் கூறினார்.

துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - ரொபர்ட் ஓ பிளக்!

வடக்கில் துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய வலய நாடுகளுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழ் காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்துவதன் மூலம் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment