Tuesday, September 6, 2011

பிரசார நடவடிக்கைகளில் உள்ளூராட்சி மன்ற சொத்துக்கள்!

Tuesday, September 06, 2011
உள்ளூராட்சி மன்றங்களிடமுள்ள சொத்துக்கள் அதன் முன்னாள் பிரதிநிதிகளால் முறைகேடான தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தேர்தல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஃகெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட வாகனம் உள்ளிட்ட சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கீர்த்தி தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை உள்ளுராட்சி மன்றங்களிடமுள்ள சொத்துக்களை பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய இணைப்பதிகாரி சட்டத்தரணி ராசாங்க ஹரிச்சந்திர குறிப்பிட்டார்.

இரண்டு உள்ளூராட்சி மன்றங்களில் இதுவரை உறுதிப்படுத்தப்படாத சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே தேர்தல் காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்குமாறு நகரசபை ஆணையாளரிடம் ராசாங்க ஹரிச்சந்திர வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்கவிடம் நியூஸ் பெஸ்ட் வினவியது.

குறித்த உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதன் பின்னர் அவற்றின் அனைத்து அதிகாரங்களும் குறித்த பகுதிகளின் பிரதேச செயலாளர்களிடமும், மாகாண ஆணையாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களிடமுள்ள சொத்துக்களை அதன் முன்னாள் உறுப்பினர்கள் பயன்படுத்த முடியாதென அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் தமக்கோ அல்லது மாகாண சபைக்கோ அறியத் தருமாறும் டொக்டர் நிஹால் ஜயத்திலக்க வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment