Monday, September 12, 2011

தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேசம்

Monday, September 12, 2011
முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் 19 தமிழர்களை குண்டு வைத்து கொன்ற தீவிரவாதிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். இது மிகவும் அபாயகரமான கருத்து.

ஒரு மூத்த அரசியல் தலைவர் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவது போன்று அவரது கருத்து அமைந்துள்ளது. தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நியாயம் இருப்பதாக கருதினால் கருணாநிதியுடன் ஒரே மேடையில் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?

காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யரும் தூக்கு தண்டனை கூடாது என்று சொல்லி இருக்கிறார். சோனியா தயவால் எம்.பி.யாக இருக்கும் அவர் இந்த கருத்தை சொன்னது அபத்தமானது. அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மணிசங்கர் அய்யர் தமிழகத்துக்குள் நுழைய முடியாது.

காங்கிரசார் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள். வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவும், இளைஞர் காங்கிரசாரும், உண்மையான காங்கிரஸ் தொண்டர்களும் சொல்கிறார்கள். எனவே உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட மேலிடத்தில் வற்புறுத்துவேன்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது என்று காலை 9 மணிக்கு எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான் ஈரோட்டில் இருப்பதால் கூட்டத்துக்கு செல்ல முடியவில்லை. நாளை கூட்டம் தொடர்ந்தால் தனித்து போட்டி என்ற கருத்தை கமிட்டியில் எடுத்து கூறுவேன்.

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் துயரமானது. இதுதொடர்பாக தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்கும் என்று நம்புகிறேன். நில அபகரிப்பு வழக்குகளில் 90 சதவீதம் உண்மையான வழக்குகள் என்றே நினைக்கிறேன். ஒன்றிரண்டு வழக்குகளில் தவறு நடந்தால் அதை சரி செய்ய வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி நல்லபடி நடக்கிறது. ஆனால் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதால் மக்களின் ஆதரவு குறைந்து விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார், மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சுரேஷ், ராஜேஷ் ராஜப்பா, விஜயபாஸ்கர், துணை மேயர் பாபு, வக்கீல் ராஜேந்திரன், முகமது அர்சத் உள்பட பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment