Wednesday, September 21, 2011

பிரித்தானிய பாராளுமன்றில் வெளியிடப்பட்ட தரவுகள் உண்மைக்குப் புறம்பானவை – கோதபாய ராஜபக்ஷ!

Wednesday, September 21, 2011
பிரித்தானிய பாராளுமன்றில் அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகள் உண்மைக்குப் புறம்பானவை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய துணைக் கண்டத்தின் மனித உரிமை விவகாரம் குறித்து அண்மையில் பிரத்தானிய பாராளுமன்றில் விவாதம் நடைபெற்றது.

இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற கடைசி ஐந்து மாதங்களில் 100,000 பேர் யுத்தம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பாராளுமன்றில் தகவல் வெளியிடப்பட்டதாகவும், இந்தத் தகவல் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் மற்றும் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறு முட்டாள்தனமான புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தம் நடைபெற்ற இறுதி ஐந்து மாதங்களில் 40000 பொதுமக்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சியோபாயின் மெக்டொனாஹ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் யுத்தக் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென விரும்பும் தரப்பினர் தாருஸ்மன் அறிக்கை மற்றும் செனல்4 ஆவணப்படம் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நான்காம் கட்ட ஈழப்போரில் 6000 படையதிகாரிகள் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபையினால் இறுதியாக இலங்கை யுத்தம் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 10000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொண்டு நிறுவன ஊழியர்கள் நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.

இடம்பெயர் மக்களுக்கு வங்கி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட போது பெரும் அளவிலான பணமும் தங்க ஆபரணங்களும் வைப்பில் இடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மக்கள் பணமோ அல்லது தங்க நகைகளோ களவாடப்பட்டதாக முறைப்பாடு செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment