Wednesday, September 07, 2011குடாநாட்டினை கலக்கி வரும் மர்ம மனிதன் விவகாரம் மக்கள் மீது அடக்குமுறையினைப்பிரயோகிக்கும் ஒரு உத்தியே என யாழ்.பல்கலைக்கழக சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டினில் இன்று இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையினிலேயே இக்குற்றச்சாட்டை அவர்கள் முன் வைத்துள்ளனர்.
இன்று காலை 11 மணியுடன் தமது விரிவுரைகளை நிறுத்திக்கொண்ட யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடினர். அவர்களுள் பெரும்பாலானோர் தமக்கான பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டள்ளதாக கூறி வாய்களை மூடி கறுப்பு துணிகளை கட்டியுமிருந்தனர்.
மர்ம மனிதன் பின்னணியில் அரசும் அரச படைகளுமேயுள்ளதாக மாணவர்கள் கோசங்களை எழுப்பினர்.மர்ம மனிதன் விவகாரம் சிங்கள மக்கள் வாழும் எந்தவொரு பிரதேசத்திலும் நடைபெற்றிருக்கவில்லையே என கேள்வி எழுப்பிய ஆர்ப்பாட்டகாரர்கள் கிழக்கிலும் வடக்கிலும் தமிழ் மற்றும் சகோதர இனமான முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழும் பிரதேசங்களில் அதனை குலைக்கும் ஒரே நோக்கமாக நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
தங்களை பாதகாப்பதற்கான உரிமை இல்லாத நிலையில் எமது மாணவர்களிற்கு ஏன் தலைமைத்துவப்பயிற்சி எனவும் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். மர்ம மனிதன் விவகாரம் தொடர்பினில் இதுவரை இலங்கை அரசு எதவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கவில்லையென குற்றஞ்சாட்டிய அவர்கள் மாறாக மர்ம மனிதனிடமிருந்து தம்மை பாதுகாக்கும் மக்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாய்வது எதற்கெனவும் கேள்வி எழுப்பினர்.
சுமார் ஓரு மணி நேரமாக ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த வேளை மாணவ பிரதிநிதிகள் பலரும் உரையாற்றினர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றம் கல்வி சாரா ஊழியர் சங்கமென பல தரப்புகளும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்தன.
இப்போராட்டத்தினை தொடர்ந்து கல்வி சாரா ஊழியர் சங்கம் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டமொன்றை பல்கலைக்கழக பிரதான நுழை வாயிலருகே நடத்தியிருந்தனர்.
No comments:
Post a Comment