(File photo) Congress senior leader late G K Moopanar and Jayanthi Natarajan bending over the crumpled body of Rajiv Gandhi lying face down.
Monday,September,05,2011
சென்னை: ராஜீவ்காந்தி கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் இருந்தவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து, மரண தண்டனைக்கு எதிராக களமிறங்கிவிட்டனர்.
காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர்; இலங்கைப் பிரச்னையை குத்தகைக்கு எடுத்துள்ள வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான்கள் அனல் கக்குகின்றனர்.இவர்கள் அத்தனை பேரும், இத்தனை நாளாய் எங்கிருந்தனர்? முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன் இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை.இன்று ஐகோர்ட் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், வீதியில் இறங்கிப் போராடி, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செகின்றனர். ஆனால், கொலை நடந்த கொஞ்ச நாளில், இதே நால்வருக்காக வழக்கறிஞர்கள் கூட ஆஜராக மறுத்தது, இவர்களுக்குத் தெரியுமா? அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே, வழக்கறிஞர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறந்துவிட முடியுமா?
இதிலிருந்து என்ன தெரிகிறது? இவையெல்லாம் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் போராட்டங்கள். சிந்தித்து, விஷயத்தின் வீரியத்தைச் சீர்தூக்கிப் பார்த்து நடத்தப்படுபவை அல்ல. மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், தமிழர்கள் என ஒரு கோஷ்டி கோஷம் போடுகிறது. ராஜிவோடு இறந்தவர்கள் மட்டுமென்ன, சிங்களவர்களா? இப்படி குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்காமல், ஒவ்வொருவருக்கும் ஜாதி, மத, இன அடையாளங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஒருத்தரையும் தண்டிக்க முடியாது.ஆட்டோ சங்கர் கூட தமிழன் தான். ஏன், "வீரப்பர்' கூட, திடீரென தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். தமிழர் என்பதற்காக முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுவித்தால், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று இளம்பிஞ்சுகளை நெருப்பில் பொசுக்கிய நெடுஞ்செழியன், முனியப்பன், மாது ஆகிய மூவரும் கூட தமிழர்கள் தான். ராமதாசைக் கேட்டால், "அவர்கள் வன்னிய சொந்தங்கள்' என, இன்னும் நெருக்கம் காட்டுவார். அவர்களையும் விடுவித்துவிட வேண்டியது தானா?
body of Rajiv Gandhi
தமிழர்களுக்காக ஒரு குழு, சீக்கியர்களுக்காக ஒரு குழு, தெலுங்கர்களுக்காக ஒரு குழுவெனக் கிளம்பிக் கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டம் எதற்கு, காவல் துறை எதற்கு, நீதிமன்றங்கள் எதற்கு? அத்தனையையும் கலைத்துவிட்டு, வலுவான குழு சொல்வதே வேதாந்தம் என்றாக்கிவிட வேண்டியது தானே."குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவைப் பரிசீலிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுவிட்டது; இது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது; நியாயமற்றது' என, சட்டத்தைக் கரைத்துக் குடித்த ராம் ஜெத்மலானி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர். மூவர் தரப்பிலும் வாதாடிய வழக்கறிஞர்கள் வைத்த வாதம், காலதாமதம் மட்டுமே.
இதே 11 ஆண்டுகள் நான்கு மாத தாமதத்தோடு, "உங்கள் கருணை மனு ஏற்கப்படுகிறது; நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள்' என ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தால், "அதெல்லாம் கிடையாது; நீங்கள் ரொம்ப தாமதமாக முடிவெடுத்துவிட்டீர்கள்; நாங்கள் சிறையில் தான் இருப்போம்' என, சொல்லியிருப்பார்களா?கருணை மனுவை பரிசீலிப்பதற்கு கவர்னருக்கோ, ஜனாதிபதிக்கோ காலக்கெடு எதுவும் சட்டத்தில் விதிக்கப்படவில்லை. சீக்கிரமாக பரிசீலிக்கச் சொல்லி கேட்டுக்கொள்ளலாம்; அவ்வளவே. கேபினட்டை யாரும் நிர்பந்திக்க முடியாது.காலாகாலத்தில் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் தான் வலியுறுத்தி வருகின்றன. அதே நீதிமன்றங்களில் கூட, 25 ஆண்டுக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் இருப்பதை மறந்துவிடுவதற்கில்லை.உணர்ச்சிகளின் உந்துதலில் தீர்ப்புகள் திருத்தப்படுமானால், குற்றங்களின் எண்ணிக்கை ஒருக்காலும் குறையப்போவதில்லை!
அரசியல்வாதிகளின் போட்டா போட்டி!மூவரின் மரண தண்டனையை மாற்ற வேண்டும் என்பதில், அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் போட்டா போட்டி அலாதியானது. இதற்காகவே கட்சி நடத்தும் வைகோ, ராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் மற்றும் சீமான் போன்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. எந்தப் பிரச்னை பற்றி எரியுமோ, அந்தப் பிரச்னை மீது, முடிந்த வரை எண்ணெய் ஊற்றுவர். தீர ஆராய்ந்து உண்மையை உணரும் நோக்கமில்லாமல், செங்கொடிக்கு சிலை வைக்கும் வரை சென்றுவிட்ட பிறகு, சொல்வதற்கு எதுவும் இல்லை.தமிழ், தமிழர் பற்றிய அரசியல் எனும்போது, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பங்களிப்பு இல்லாமல் எப்படி? "ஆயுள் முழுவதும் தங்கள் தவறை எண்ணி வருந்தும் விதமாகத் தான் தண்டனை இருக்க வேண்டும்; அதனால், மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்' என, முதல் நாள், கருணை மனு விடுத்தார்.மறுநாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அ.தி.மு.க., அந்தப் பெயரைத் தட்டிச் சென்றுவிடுமோ என்றஞ்சி, "அவர்கள் மூவரையும் விடுதலையே செய்துவிட வேண்டும்' என, ஒரே போடாக போட்டுவிட்டார். தூக்குக் கயிறை எதிர்நோக்கியிருக்கும் முருகன் கூட இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை.கொண்ட கொள்கையில் உடும்புப் பிடியாக இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட சலனப்பட்டுவிட்டது அதிசயம் தான். முதல் நாள், "எனக்கெல்லாம் அந்த அதிகாரம் கிடையாது' என்றவர், மறுநாளே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்.காங்கிரசின் பெயரைச் சொல்லி, அதன் கொடி நிறத்திலேயே, "சேனல்' நடத்துபவர்கள் கூட, இந்தப் பிரச்னையில் தலையிடவில்லை. ராஜிவ் கொலையை நினைவுபடுத்துவதை விட, "ராத்திரி நேரத்து பூஜையில்' பாணி பாடல்கள் தான் கல்லா கட்ட உதவும் என தீர்மானித்துவிட்டனர் போல. எல்லாம் ஓட்டு படுத்தும் பாடு. ஆனால், இது ஓட்டாக மாறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும்
கிடையாது.ஏனெனில், நான்கு
பே
ர் கூடி நின்று கோஷம் போடுவதெல்லாம், மக்கள் கருத்தாகிவிடாது என்பதற்கு, கடந்த தேர்தல் முடிவுகளே சாட்சி.
rajiv-killer_2-Body of Sivarasan at Konanankunte 1991
ராஜிவுடன் இறந்தவர்கள் எத்தனை பேர்?கடந்த 1991ம் ஆண்டு, மே 21 இரவு, 10 மணி 18 நிமிடங்களில் வெடித்தது அந்த மனித வெடிகுண்டு. அதில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் குழப்பம் தொடர்கிறது; காரணம் சுலபமானது. இறந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தினால், குழப்பம் தீர்ந்துவிடும்.புலிகளின் மனித வெடிகுண்டின் இலக்கு ராஜிவ். அவரோடு இறந்த ஒரே அரசியல்வாதி லீக் முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகர். இவர்கள் தவிர, ராஜிவின் தனிப் பாதுகாப்பு அதிகாரி பி.கே.குப்தா, எஸ்.பி., முகமது இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப், சப் - இன்ஸ்பெக்டர் எத்திராஜு, கான்ஸ்டபிள்கள் முருகன், தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன் என ஒன்பது பேர் பலியாகினர்.இவர்களைத் தவிர, லதா கண்ணன், கோகிலவாணி, சந்தானி பேகம், சரோஜாதேவி, டேனியல் பீட்டர் என மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இவர்கள், லதா கண்ணனின் தலைமையில், காங்கிரஸ் பிரமுகர் மரகதம் சந்திரசேகருக்காக பணியாற்ற வந்தவர்கள்.மேற்சொன்ன ஐந்து பேர் தவிர, மனித வெடிகுண்டான தானுவும், அவர்களால் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்ட அரிபாபுவும் உயிரிழந்தனர். ஆக மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 18. இவர்களில் அப்பாவிகள் 16 பேர் சதித் திட்டத்தில் பங்கு பெற்றவர்கள் இருவர்.
rajiv gandhi-killer sivarasan
மரண தண்டனையும், மனிதநேயமும்:"இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், 21ம் நூற்றாண்டைப் போன்ற நாகரிக காலத்தில் மரண தண்டனை என்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனம்' என்பது, கொலையாளிகளுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளவர்களின் வாதம்.கூர்ந்து கவனித்தால் தான் தெரியும், இவர்களது நோக்கம் மரண தண்டனையை ரத்து செய்வது அல்ல; இந்த மூவரை மட்டும் விடுவிப்பது தான் என்று. ஒருவேளை, அவர்களது வாதம், ஒட்டுமொத்த மரண தண்டனைக்கே எதிரானது தான் என்றால், பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கும், மும்பையைச் சிதறடித்த அஜ்மல் கசாப்புக்கும் கூட மரண தண்டனை கூடாது என்பார்களா?
இந்தக் கேள்வியை, ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, பகிரங்கமாகவே கேட்டுவிட்டார். மரண தண்டனைக்கு எதிராக சண்டமாருதம் செய்தவர்கள் யாரும் சத்தமே காட்டவில்லை. இப்படி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனையை ரத்து செய்து கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்காது; சட்டாம்பிள்ளைகளின் ஆட்சி தான் நடக்கும். உண்மையான காட்டாட்சியை அப்போது தான் காணமுடியும்.
மரண தண்டனை வரை விதிக்கப்படலாம் என்கிறபோதே அஞ்சாமல், படுபாதகச் செயல்களைச் செய்யத் தயங்காதவர்கள், அதை ரத்தும் செய்துவிட்டால், நெஞ்சுரம் கொண்டுவிட மாட்டார்களா? எந்த அட்டூழியத்தையும் செய்யத் துணிந்துவிட மாட்டார்களா?"உலகின் 130 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது; 80 நாடுகளில் மரண தண்டனை இருந்தாலும், அது நிறைவேற்றப்படுவதில்லை' என, புதிதாக முளைத்த சில, "புத்தர்கள்' புள்ளிவிவரம் அளிக்கின்றனர். அதன் பிறகு, அந்த, 210 நாடுகளிலும் கொலைகள் நடப்பதில்லையா, கற்பழிப்புகள் குறைந்துவிட்டனவா, மக்கள் ஞானமடைந்துவிட்டனரா என்பன போன்ற கேள்விகளுக்கு, இவர்கள் பதில் அளிப்பதில்லை.
இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் எல்லா கொலைக் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவதில்லை. அரிதினும் அரிதான வழக்குகளிலேயே அவ்வாறு வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்று வீசியது, அரிதான வழக்கில்லை எனில், வேறென்ன?தவறு செய்பவர்களே இல்லாத நாட்டுக்கு தண்டனைகள் தேவையில்லை; பிஞ்சுக் குழந்தை என்று கூட பார்க்காத காமுகர்களுக்கும், காது தோட்டுக்காக கழுத்தையே அறுக்கும் கிராதகர்களுக்கும், குடிபோதையில் உயிர் பறிக்கும் கொலைகாரர்களுக்கும், குருவியைச் சுடுவது போல சுட்டுத்தள்ளும் கசாப்களுக்கும், பார்லிமென்டையே பதம் பார்க்கத் துணிந்த அப்சல்களுக்கும் மரண தண்டனை அன்றி, வேறென்ன தண்டனை தருவது?அவர்கள் வாதத்துக்கே வருவோம்... பயங்கரவாதிகளைப் பழிவாங்குவதாகச் சொல்லி, ஒட்டுமொத்த இனத்தையே கொன்று குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளாரே, இலங்கை அதிபர் ராஜபக்ஷே; ஒருவேளை, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சர்வதேச நீதிமன்றம், ஆறு மாத சிறைத் தண்டனையும், 600 ரூபாய் அபராதமும் விதித்தால், இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? நடுரோட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என கொக்கரிக்க மாட்டார்களா?
தண்டனைக்கு உள்ளானவர்களை, மாநிதாபிமானத்தூடு அணுக வேண்டும் என்று ஒரு தரப்பு கொடி பிடிக்கத் துவங்கியுள்ளது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ, போதையின் பிடியிலோ இல்லாமல், நன்கு திட்டமிட்டு, ஒரு முறைக்கு இரு முறை ஒத்திகை பார்த்து நடத்தப்பட்டது தான் ராஜிவ் படுகொலை. இறந்தது அவர் மட்டுமல்ல; அவரது தொண்டர்கள்; பாதுகாப்புக்கு நின்றவர்கள் என மேலும் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு குடும்பம், குட்டி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா யாரும் இல்லையா? அவர்களுக்கு மட்டும் மனிதாபிமானம் காட்டப்பட்டிருக்க வேண்டாமா?இப்படி எல்லாம் கேட்டுக்கொண்டே போனால், அவற்றுக்கு ஒருக்காலும் தீர்வு கிடைக்காது. ஒரே வரியில் சொல்வதானால், மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே காட்டப்பட வேண்டியது!
சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்: ராஜிவுடன் கொலையுண்ட ஒரே அரசியல்வாதி, லீக் முனுசாமி, 65, காங்கிரசின் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவான தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் லீகின் பொதுச் செயலராக இருந்தவர். அதனாலேயே லீக் முனுசாமி என்றழைக்கப்பட்டவர். இவரது மகன் , 61, இன்றளவும் தந்தையின் பட்டத்தையும், துக்கத்தையும் சுமந்துகொண்டு இருக்கிறார்.
சம்பவம் நடந்தபோது ஏற்பட்ட சோகத்தையும், தற்போதைய நிகழ்வுகளையும் பற்றி அவர் கூறியதாவது:ராஜிவ் கொல்லப்பட்ட அதே இரவில், மயிலை மாங்கொல்லையில் ஒரு பொதுக்கூட்டத்தில் இருந்தேன். தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந்த, குடும்பத் தோழி ஒருவர், எங்கள் வீட்டுக்கு போன் செய்து, "ராஜிவ் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன; உங்கள் தந்தை எங்கே?' என விசாரித்தார்.தேர்தல் பணிக்காக, எங்கள் தந்தை ஒரு வாரமாக அங்கே தான் முகாமிட்டிருந்தார். பதறியடித்து, போளூர் வரதன் வீட்டுக்குச் சென்றோம். அவர், உண்மையைச் சொல்லத் தயங்கி, "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்றார்.எந்த மருத்துவமனை எனத் தெரியவில்லை. சாலையெங்கும் நெருப்புக் கோளம். திரும்பிய இடமெல்லாம் கலவரக் காட்சி. அரை கிலோ மீட்டர் தூரம் கடக்க, அரை மணி நேரம். காரின் முகப்பில் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., கொடிகளைக் கட்டி, அப்பல்லோ, அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் என, அந்த நள்ளிரவு நேரத்தில் ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடினோம்.அதிகாலை 3 மணிக்கு, வீட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. "வானொலியில், ராஜிவோடு இறந்தவர்களின் பட்டியலில், முனுசாமி என்ற பெயரையும் சொல்கின்றனர். அது நம் தந்தையாக இருக்குமோ' என, கதறினர்.
அப்படியே ஸ்ரீபெரும்புதூருக்குத் திருப்பினோம். அங்கிருந்த ஒரு போலீஸ் அதிகாரி, உள்ளூர் மருத்துவமனையில் தந்தையின் உடல் - ஆம், உடல் - இருப்பதாகக் கூறினார். தந்தையைப் பார்த்ததும், வெடித்துப் பிளிறினோம். கை துண்டாகியிருந்தது. வயிறு கிழிந்திருந்தது. "ஒருவன் கூட உயிர் பிழைக்கக் கூடாது; பிழைத்தவனும் ஒழுங்காக நடமாடக் கூடாது' என்ற நோக்கத்தில், வெடிகுண்டில், ஆணிகளைச் செருகியிருப்பர் போல. தந்தையின் உடலெங்கும் இரும்புத் துகள்கள் துளைத்திருந்தன. ஒவ்வொன்றாய் அகற்ற அகற்ற, பச்சை ரத்தம் பாய்ந்தது.எங்கள் குடும்பத்துக்கு முகவரியாய், முழுமதியாய் இருந்தவர் அப்பா தான். மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என, அவருக்கு ஆறு பிள்ளைகள். இருவருக்குத் தான் திருமணமாகியிருந்தது. இன்னும் நாலு பேரை கரையேற்ற வேண்டியிருந்த நேரத்தில், இந்த சதிக்கு இரையானார்.இப்படி எத்தனையோ குடும்பங்கள்; எத்தனையோ துயரங்கள். அத்தனையையும் மறந்துவிட்டு, திடீரென கிளம்பியிருக்கிறது மனிதாபிமான கோஷம். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம், நியாயம் கிடைத்திருக்கிறது என நினைத்திருந்த நேரத்தில், அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது.தமிழக வரலாற்றில் ஆறாத வடுவாய்ப் போன ராஜிவ் கொலை வழக்கை, இம்மண்ணின் மக்களால் ஒருக்காலும் மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது. உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்துவிட்டவர்களுக்கோ, அடிதடி முற்றி மரணம் ஏற்பட்டிருந்தாலோ மன்னிப்பு வழங்கலாம். இது, திட்டமிட்ட படுகொலை. பிரதமர் வி.பி.சிங் கூட்டத்திலேயே ஒத்திகை பார்க்கப்பட்ட படுபாதகம். அன்னிய நாட்டு சதியோடு நடந்த கொடூரம்.
ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்றவர்களை, சாதாரண கொலையாளிகளோடு கூட ஒப்பிடக் கூடாது. சட்டம் எல்லாருக்கும் சமம் என்று சொல்லிவிட்டு, இவர்களை மட்டும் மன்னிப்பது நியாயமில்லை. அப்படியானால், ராஜாவையும், கனிமொழியையும், கல்மாடியையும் கைது செய்வது எதற்காக? ஊழல் செய்தவர்களுக்கே தண்டனை எனும்போது, உயிரைக் குடித்தவர்களை எப்படி விட்டுவைக்கலாம்?தமிழக முதல்வருக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்... 1991க்கு முன்பு இருந்ததைப் போல, தமிழகத்தில் மீண்டும் புலிகளின் ஆதரவுக் கூட்டம், பல பெயர்களில், பல போர்வையில் புற்றீசல் போல முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவற்றை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், தேசத் தலைவர்களின் இழப்பைத் தடுக்கவே முடியாது போகும்.இவ்வாறு குமுறி முடித்தார், லீக் மோகன்.
அதே சம்பவத்தில் பலியான இன்னொருவர், இளையான்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட எஸ்.பி., முகமது இக்பால். அவரது மகன் ஜாவித் இக்பாலுக்கும் ஆவேசம் அடங்கவில்லை.
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாம். நாங்கள் மட்டுமென்ன ஜப்பானியர்களா? இவர்கள் கொலை பண்ணிக்கொண்டே இருப்பர்; நாம் மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?""எங்கள் தந்தைமார்களை இழந்து, நாங்கள் அனாதையாக நடுத்தெருவில் நின்றோமே. எங்களுக்கெல்லாம் குடும்பம், குட்டி இல்லையா? முருகனுக்கும், சாந்தனுக்கும் மட்டும் தான் இருக்கிறதா?""இந்தக் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை கொடுக்க வேண்டும் என கேட்காதது தான் நாங்கள் செய்த குற்றமா?'' என கொதித்தெழுந்தவர், வீட்டுக்கு அழைத்துச் செல்லத் தயங்கினார்.""அப்பாவின் மரணம் பற்றி பேசினாலே அம்மா கதறத் தொடங்கிவிடுகிறார்,'' என காரணம் சொன்னார். ""எங்கள் குடும்பத்துக்கு நடந்த, "துன்பியல் சம்பவம்' கொலையாளிகள் குடும்பத்துக்கு ஏன் நடக்கக் கூடாது?'' என, அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.
நமது சிறப்பு நிருபர்.Dm.
No comments:
Post a Comment