Tuesday, September 27, 2011வாஷிங்டன்: பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘787 ட்ரீம்லைனர்’ விமானத்தை போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் விமானம், நிப்பான் நிறுவனத்துக்கு டெலிவரி செய்யப்பட்டது. விமான தயாரிப்பில் உலக புகழ் பெற்ற அமெரிக்க நிறுவனம் ‘போயிங்’. இதன் ஒரு பிரிவான ‘போயிங் கமர்ஷியல் ஏர்பிளேன்ஸ்’ (பி.சி.ஏ) நிறுவனம் விமானங்களை டிசைன் செய்வது, விமானத்தின் பகுதிகளை உருவாக்கும் பணியை பல்வேறு நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுத்து அவற்றை பெற்று அசெம்பிள் செய்வது, விமான விற்பனை, பராமரிப்பு, சர்வீஸ் ஆகியவற்றை கவனித்து வருகிறது.
அமெரிக்காவின் ரென்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விமான வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் எரிபொருள் செலவு அதிகம் ஏற்படுத்தாத, குறைந்த எடை கொண்ட விமானத்தை உருவாக்க பிசிஏ பல ஆண்டுகளாக தீவிர ஆய்வு நடத்தி வருகிறது. ‘787 ட்ரீம்லைனர்’ என்று 2005-ல் பெயர் வைக்கப்பட்டது. ஆராய்ச்சி ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க.. ஆர்டர்களும் குவிந்து கொண்டிருந்தன.
787 ட்ரீம்லைனர் 2007-ல் வரும் என்றது போயிங். ஆய்வு முடியாததால் வரவில்லை.
சியாட்டில் நகரை ஒட்டியுள்ள எவரெட் தொழிற்கூடத்தில் அசெம்பிளிங் வேலை 2009 டிசம்பரில் முடிந்து, ட்ரீம்லைனரை வெள்ளோட்டம் விட்டது போயிங். முறைப்படியான சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்ததில், ஜப்பானை சேர்ந்த ‘ஆல் நிப்பான் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு முதல் ட்ரீம்லைனர் விமானத்தின் சாவியை ஒப்படைத்திருக்கிறது போயிங். மிகமிக எடை குறைந்த ‘கம்போசைட்’ பொருட்களைக் கொண்டு பல பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வழக்கமான அலுமினிய பாடிக்கு பதிலாக கார்பன் பைபர் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கத்தைவிட பெரிய ஜன்னல் கண்ணாடி, ஜன்னல் வெளிச்சத்தை குறைத்துக் கொள்ளும் எலக்ட்ரானிக் ‘டிம்மர்’ வசதி, உயரத்தால் ஏற்படும் காது அழுத்தம் போன்றவற்றை தவிர்க்கும் வகையில் பிரத்யேக பிரஷரைசேஷன் வசதி ஆகியவை சிறப்பம்சங்கள். எரிபொருள் 20% மிச்சமாகும் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் 330 பேர் வரை பயணம் செய்ய முடியும். ஒரு விமானம் விலை ரூ.907 கோடி. கடந்த ஜூன் மாத நிலவரப்படி, 787 ட்ரீம்லைனர் விமானத்துக்காக உலகம் முழுவதும் இருந்து 827 ஆர்டர்கள் வந்திருக்கின்றன. கூடுதல் வசதிகளுடன் கூடிய 787ட்ரீம்லைனர்-9வது மாடல் விலை ரூ.1,068 கோடி.
No comments:
Post a Comment