Monday, September 12, 2011

பரமக்குடியில் திடீர் கலவரம், தீவைப்பு துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி; டி.ஐ.ஜி., காயம்!

Monday, September 12, 2011
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று மதியம் போலீசாருக்கும், ஒரு தரப்பினருக்கும் இடையே வெடித்த மோதலில் போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வன்முறை கும்பலை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் 5 பேர் பலியாயினர். முழு விவரம் இன்னும் கிடைக்கவில்லை. தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

இம்மானுவேல் சேகரன் 55 வது நினைவு நாளை ஒரு பிரிவினர் இன்று அனுஷ்டிக்கின்றனர். இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சுற்றுப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் வாகனங்களில் நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

கம்பு, கல் , சோடாபாட்டில் வீச்சு: ஜான் பாண்டியன் வந்தால் இங்கு பதட்டம் ஏற்பட வழிவகுக்கும் என போலீசார் இவரை வல்லநாடு அருகே மறித்து தொடர்ந்து செல்லாதவாறு சிறை வைத்தனர். இந்த தகவல் இவரது ஆதரவாளர்களுக்கு தெரிய வந்ததும் பரமக்குடியில் 5முக்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இவர்களை கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தினர். இந்நேரத்தில் போலீசார் மீது கம்பு, கல் , சோடாபாட்டில் வீசப்பட்டது .தொடர்ந்து இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

ஒரு கும்பல் போலீசாரின் 2 வஜ்ரா வாகனத்திற்கு தீ வைத்தது. டி.எஸ்.பி., மற்றும் போலீசார் காயமுற்றனர். போலீசார் வன்முறைக்கும்பலை சமாளிக்க கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் டி.ஐ.ஜி., சந்தீப் மி்ட்டல் , எஸ். பி., செந்தில்வேலன், பரமக்குடி டி.எஸ்.பி., கணேசன் மற்றும் சப்.இன்ஸ்பெக்டர், போலீசார் 8 பேர் காயமுற்றனர். தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் இறந்து விட்டனர். பலர் காயமுற்றனர்.பரமக்குடி கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஐந்து பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் மூன்று பேரின் உடல்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. இருவரது பையிலிருந்த மொபைல் போன்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. இதைக் கேட்ட ராமநாதபுரம் டி.எஸ்.பி., முரளிதரன், போன்களில் பேசியவர்களிடம் கேட்ட போது, ஒருவர் பரமக்குடி ஓட்டப்பாலத்தைச் சேர்ந்த ஜெயபால், 20. இவர், ஒரு மாதத்திற்கு முன் கலப்புத் திருமணம் செய்தவர் என்றும், மற்றொருவர், பரமக்குடி காந்திநகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 50, என்றும் மூன்றாவது நபர் பரமக்குடியைச் சேர்ந்த கணேசன் என்றும் தெரியவந்துள்ளது. குண்டு காயமடைந்தவர்களில் எட்டு பேர், இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், தலையில் குண்டு காயத்துடன் இருந்த பரமக்குடி அருகேயுள்ள கீழகொடுமனூரைச் சேர்ந்த தீர்ப்பு கனி, 25, பலியானார்.அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில் குண்டு காயத்துடன் அனுமதிக்கப்பட்ட மற்றொருவரும் பலியானார். இவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இவரையும் சேர்த்து, துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இது போல் திருமங்கலத்திலும் மறியல் நடந்தது. மதுரையிலும் சில பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.

மதுரை ரிங்ரோட்டில் துப்பாக்கிச்சூடு : சிவகங்கை மாவட்டம் பாட்டம் பகுதியில் இருந்து ஒரு பிரிவினர் திறந்த லாரியில் வந்து கொண்டிருந்தனர்.மதுரை ரிங்ரோட்டில் சிந்தாமணி அவுட்போஸ்ட் அருகே வந்தபோது வாகனத்தை நிறுத்தி தொடர்ந்து செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனையடுத்து போலீசாருக்கும், இந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் போலீசார் தாக்கப்பட்டார். உடனே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஜெயபிரசாத் ( 19 ) , பாலகிருஷ்ணன் (19 ) ஆகியோர் காயமுற்றனர். தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் கல்வீச்சில் சேதமடைந்தன. இதனால் மதுரை ரிங்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment