Tuesday, September 06, 2011ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரையும் உடனே தூக்கிலிடக் கோரி வலியுறுத்தி சென்னையில் மறியல் 300 காங்கிரசார் கைது!
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரையும் உடனே தூக்கிலிடக் கோரி சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் முன்பு இன்று காங்கிரசார் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 300க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்தனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில், மாஜி எம்.எல்.ஏ.க்கள் அருள் அன்பரசு, விடியல் சேகர், வேணுகோபால், ஜீனத் சர்புதீன், மாவட்டத் தலைவர்கள் ராயபுரம் மனோ, கோவிந்தசாமி, சென்னை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, அரக்கோணம் நாடாளுமன்ற இளைஞர் காங். தலைவர் நாசே ராஜேஷ், சதீஷ், பிஜு சாக்கோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை உடனே தூக்கிலிட வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வைகோ, சீமான், திருமாவளவனை கைது செய்யவேண்டும்; மதிமுக, நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரசார் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிலர் மதிமுக கொடியை எரிக்க முயன்றனர். அதை போலீசார் தடுத்தனர். சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் கடற்கரை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மறியலில் ஈடுபட்ட சிலர் வன்முறையில் இறங்கினர். அந்த வழியாக வந்த ஒரு காரை அடித்து நொறுக்கினர். மறியலை காங்கிரசார் கைவிட மறுத்ததால், 300 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூரில் உள்ள சமுதாய கூடத்துக்கு அவர்களை அழைத்து சென்றனர்.
No comments:
Post a Comment