Wednesday, September 7, 2011

3ஆம் இணைப்பு-டெல்லி ஐகோர்ட்டில் இன்று காலை பயங்கரம் : குண்டு வெடித்து 11 பேர் பலி!

Wednesday, September 07, 2011
புதுடெல்லி: டெல்லி ஐகோர்ட் அருகே இன்று காலை பயங்கர குண்டு வெடித்தது. இதில், 11 பேர் உடல் சிதறி பலியாயினர் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் எப்போதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். டெல்லி ஐகோர்ட் வளாகத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணிக்கு ஐகோர்ட் திறக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்குள் செல்ல வாயில் எண் 5-ல் நூற்றுக்கும் அதிகமானோர் வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது சரியாக 10.17 மணிக்கு 5-ம் எண் வாயில் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. வரிசையில் நின்றிருந்தவர்கள், தூக்கி வீசப்பட்டனர். இதில் 9 பேர் உடல் சிதறி பலியாயினர். 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். குண்டு வெடித்ததும் கோர்ட் வளாகத்தில் இருந்தவர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால், அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்தன.

காயமடைந்தவர்களை போலீசார் மற்றும் மீட்புப் படையினர் மீட்டு ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ஐகோர்ட் வளாகத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அங்கு போலீஸ் ஸ்பெஷல் கமிஷனர்கள் தர்மேந்திர குமார், பி.என்.அகர்வால் மற்றும் இணை கமிஷனர்கள் ஆர்.எஸ்.கிருஷ்ணய்யா, சந்தீப் கோயல் தலைமையில் போலீசாரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தடய அறிவியல் நிபுணர்கள் சோதனைக்கு பிறகே குண்டு எங்கு மறைத்து வைக்கப்பட்டது, எந்த வகையை சேர்ந்தது போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். குண்டு வெடித்த இடத்தில் தேசிய புலனாய்வு நிபுணர்களும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களவை இன்று காலை கூடியதும், ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த தகவலை மாநிலங்களவை தலைவர் அன்சாரி தெரிவித்தார்.

இது தொடர்பான அறிக்கை, பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மக்களவையில் அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பிற்பகலில் குண்டு வெடிப்பு குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஐகோர்ட்டில் கடந்த மே 25-ம் தேதி வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. இதைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஐகோர்ட் வளாகத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஐகோர்ட்டில் மீண்டும் சக்திவாய்ந்த குண்டு வெடித்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி குண்டு வெடிப்பு : பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ 4 லட்சம்- டெல்லி அரசு!

டெல்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பில் 11 பேர் பலியானார்கள், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

குண்டுவெடிப்பில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக டெல்லி அரசு அறிவித்து உள்ளது. அதுபோல் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.


டெல்லி குண்டு வெடிப்பு : பாகிஸ்தானை சேர்ந்த ஹூஜி அமைப்புக்கு தொடர்பு!

டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஹர்கத்-அல்-ஜிகாத்-இஸ்லாமி (ஹூஜி ) அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது. அந்த இயக்கத்தின் இ.மெயில் மூலம் இது தெரியவந்து உள்ளது என தேசிய புலனாய்வுத்துறை தலைவர் தெரிவித்து உள்ளார்.

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இந்த அமைப்பு இருந்தது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment