Sunday, September 25, 2011பீஜிங்: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலைய கதிர்வீச்சுக்குப் பின், 20க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்களின் கட்டுமானத்தை நிறுத்தி வைத்துள்ள சீனா, இந்தாண்டின் இறுதிக்குள் மீண்டும் அந்தக் கட்டுமானத்தை துவக்க முடிவு செய்துள்ளது.
சீனாவில் தற்போது 14 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனினும் தனது மின் தேவைக்கு சீனா, அனல்மின் நிலையங்களை நம்பித்தான் உள்ளது. இதனால். சீனா வெளியிடும் கார்பனின் அளவு அதிகளவில் இருப்பதாகவும், சுற்றுச் சூழலுக்கு அது பெரும் கேடு விளைவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
27 அணுமின் நிலையங்கள்: அதனால், 2020க்குள், 80 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அணுமின் உற்பத்தி மூலம் தயாரிக்க சீனா முடிவு செய்தது. இதையடுத்து, 27 அணுமின் நிலையங்களை அமைப்பதில் சீன அரசு தீவிரம் கொண்டது. இவற்றில் பெரும்பாலானவை நாட்டின் கடற்கரையோரம் அமைந்தவை. ஒவ்வொரு நிலையமும், ஆயிரம் மெகாவாட் திறனை விட அதிகம் உற்பத்தித் திறன் கொண்டவை. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்படுபவை.
அமெரிக்காவை விஞ்சும் தொழில்நுட்பம்: அதேநேரம், தனது சொந்த உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தாண்டின் இறுதிக்குள் ஒரு அணுமின் நிலையத்தை செயல்படுத்துவதிலும் சீனா முனைப்பு காட்டி வருகிறது. சீனாவின் உள்நாட்டுத் தயாரிப்பான சி.ஏ.பி.,1400 அணு உலை, அமெரிக்காவின் ஏ.பி., 1000 அணு உலையை விட அதிகளவில் மின் உற்பத்தியில் ஈடுபடும் திறன் கொண்டது. சி.ஏ.பி.,யை வடிவமைக்கும் பணியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். தனது உள்நாட்டு அணுமின் நிலையங்களை அமைக்கும் கையோடு, பாகிஸ்தானுக்கும் ஒரு கிகாவாட் அணுமின் நிலையத்தை அமைத்துத் தருவதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.
பீதியூட்டிய புக்குஷிமா: இந்நிலையில் கடந்த மார்ச்சில், ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமியைத் தொடர்ந்து புக்குஷிமா அணுமின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டதும், அதன் நீண்ட கால விளைவுகள் பற்றிய ஆய்வுகளும் உலகளவில், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கின. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், தங்களின் அணுமின் நிலையங்களில் துவக்க காலகட்டத்தைச் சேர்ந்தவற்றை இழுத்து மூடின. சீனா, 27 நிலையங்களின் கட்டுமானத்தையும் நிறுத்தி விட்டதாக அறிவித்தது.
மீண்டும் துவக்கம்: ஆனால், நாட்டின் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, அவற்றை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளது. இது சமீபத்தில், சீனாவின் சுற்றுச் சூழல் துறையின் உயர் அதிகாரி அளித்த பேட்டி மூலம் உறுதியாகியுள்ளது. தேசிய மேம்பாடு மற்றம் சீர்திருத்த கமிஷனின் துணைத் தலைவர் ஷீ ஷென்ஹூவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,"மின் சேமிப்பில் குறைந்த செலவு, மின் திறன் அதிகரிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை மேம்படுத்தல், பசுமை வாயுக்களை வெளியிடுவதில் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புடன் கூடிய அணுமின் சக்தியை மேம்படுத்தல் ஆகியவற்றில் சீனா நம்பிக்கை கொண்டுள்ளது' என்று தெரிவித்தார்.
கார்பன் குறைப்பில் ஈடுபாடு: கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் தொழில்நுட்பமான, கார்பன் பயன்பாடு மற்றும் சேமிப்பு (சி.சி.யு.எஸ்.,) குறித்த ஆய்விலும் சீனா தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறது. இந்தாண்டில் மட்டும் சி.சி.யு.எஸ்., ஆய்வுக்காக சீனா, 62.7 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. அதேநேரம், தற்போது செயல்பாட்டில் உள்ள மற்றும் கட்டுமானத்தில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும், சீனா, பாதுகாப்பு மற்றும் பேரிடர் தாங்கும் வலிமை குறித்த பரிசோதனைகளை இந்தாண்டின் இறுதிக்குள் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது. அதனால், இந்தியாவில் அணுமின் நிலையங்களுக்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களைப் போல சீனாவிலும் நடந்து விடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு தெளிவாகவே உள்ளது.
No comments:
Post a Comment