Wednesday, September 21, 2011

வடக்கில் நிலக்கண்ணி வெடிகள் அனைத்தையும் அகற்ற 10 வருடங்கள் தேவை-நிலக்கண்ணிவெடி அகற்றும் சர்வதேச அமைப்புக்கள்!

Wednesday, September 21, 2011
வட மாகாணத்தில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகள் அனைத்தையும் அகற்றுவதற்கு இன்னும் 10 வருடங்கள் செல்லும் என இலங்கையில் நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சர்வதேச அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகள் வடபகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுவதாக அந்த அமைப்புக்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல் இதுவரை 60 ஆயிரத்துக்குத் மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக அந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுவீஸ் ஃபவுன்டேஷன் ஃபோ மைன் எக்ஸன் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் நிலக்கண்ணி வெடி பயன்பாட்டினை தடை செய்வதற்கான கொள்கைப் பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை என "த லேள்ட் மைன் என்ட் க்லஸ்டர் மியுனிசன் மொனிடர்" எனும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவே இலங்கையில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தளவிலேயே காணப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் மீளக்குடியேறிய விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் நிலக்கண்ணி வெடிகள் அதற்குத் தடையாக உள்ளதென நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை வடக்கின் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் தொடர்பில் மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோனிடம் வினவியபோது, வடமாகாணத்தில் தற்போது சுமார் இரண்டாயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை மாத்திரமே மீளக்குடியேற்ற வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பேரில், ஏழாயிரத்து 427 பேர் மாத்திரமே மீளக்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

நிலக்கண்ணி வெடி அகற்றப்பட்டு பிரதேச செயலாளரின் சான்றிதழ் கிடைத்தவுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் எஞ்சியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களை மீளக்குடியேற்ற வேண்டியுள்ள பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் பூர்த்தியாகும் என தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சர், காடுகளில் உள்ள நிலக்கண்ணி வெடிகள் தொடர்பில் தம்மால் கருத்து வெளியிட முடியாது என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment