Wednesday, August 24, 2011
இலங்கையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக இணைந்து இதுதான் தமிழர்களது பிரச்சினை என்ற ஒரே முடிவை எமது நாடாளுமன்றக் குழுவிற்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இந்தியக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் உறுதியளித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் தொடர்பான இலங்கை தமிழர் மாநாடு புதுடில்லியில் உள்ள இந்திய அரசமைப்பு அரங்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இம்மாநாடு இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஆரம்பமானது.
இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவமாகக் கொண்ட எட்டு தமிழ்க் கட்சிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டன.
இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளர் சுதர்சன நாச்சியப்பன் தனது அறிமுக உரையில் தெரிவித்தவை வருமாறு
இந்தியா முழுவதும் பிரச்சினைகள் இருந்தாலும், அண்டை நாடான இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்சினையை அனைத்துக் கட்சிகளின் சார்பாக புதிய நோக்கத்துடன் பார்க்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றைத் தொடங்கியுள்ளோம்.
எனவே, இங்கு வருகை தந் திருக்கும் இலங்கையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக இணைந்து தமிழர் பிரச்சினைகளைப் பற்றி பேசி இதுதான் தமிழர்களது பிரச்சினை என்ற ஒரே முடிவை நீங்கள் எங்கள் நாடாளுமன்றக் குழுவிற்குத் தெரிவிக்க வேண்டும். அதை எங்கள் அனைத்துக் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேரந்து நாடாளுமன்றம் கொண்டு சென்று இதை இந்தியா நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நல்ல முறையில் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு கோரிக்கையை வைக்கின்றார்கள். ஆனால், துன்பப்பட்டு, துயரப்பட்டு, பாதிக்கப்பட்டு, அல்லற்பட்டுக் கொண்டு தாய்மண்ணே கதி என்று கிடக்கும் இலங்கையில் வாழும் முப்பது இலட்சம் தமிழ் மக்களுக்கு என்ன தேவை, அவர்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்று அவர்களது பிரச்சினை தொடர்பாக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்களாகவே பேசுங்கள். ஒரு நல்ல முடிவை எடுங்கள்.
நாங்கள் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை, யாரும் எங்களுக்கு வழிகாட்டவில்லை, உங்கள் மக்களது பிரச்சினை நீங்கள்தான் பேசவேண்டும். ஒருமனதாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். அதை நாங்கள் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நாடாளுமன்றத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் கொண்டுவருவோம். அதை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் இணைந்து இந்திய அரசை நடவடிக்கை எடுக்கவைப்போம்.
இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் இந்திய நாடாளுமன்றத்தில் வலுவான குழு இல்லை. அதனால்தான் நாங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக முதன் முறையாக பார்லிமென்ட் போரம் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.
இதன் மூலம் இந்தியாவின் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தமிழர்களின் பிரச்சினைகளை, இந்த மாநாட்டின் தீர்மானமான ஒரே முடிவின் மூலம், தமிழர்களுக்கு இதுதான் தேவை என்பதை ஒரே குரலில், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு, இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, இந்திய அரசு உடனடியாக தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க, வலுவான அடித்தளம் அமைப்போம் என்று தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.எனறார்.
No comments:
Post a Comment