Wednesday, August 31, 2011

ராஜிவ் கொலை வழக்கில் கருணை மனுக்கள் மீதான பரிசீலனையில் தாமதம்: மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதில் ரெடி!

Wednesday,August,31,2011
ராஜிவ் கொலை வழக்கில் கருணை மனுக்கள் மீதான பரிசீலனையில் தாமதம்: மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதில் ரெடி!

புதுடில்லி: மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை பரிசீலிக்க ஜனாதிபதிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை ஐகோர்ட்டுக்கு பதிலளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும், செப்டம்பர் 9ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும், அதுவரை தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் முருகன், சாந்தன், பேரறிவாளன் தனித்தனியே, ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். கருணை மனு, 11 ஆண்டுகள் நான்கு மாதங்கள் ஜனாதிபதியிடம் நிலுவையில் இருந்தது என்றும், முடிவெடுக்க நீண்ட காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுக்கள், நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. முருகன், சாந்தன் சார்பில், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, வழக்கறிஞர் வைகை, பேரறிவாளன் சார்பில், மூத்த வழக்கறிஞர் காலின் கான்ஸ்லேவ்ஸ், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியன் ஆஜராகி வாதாடினர்.

விசாரணையின் முடிவில், மூன்று மனுக்களிலும் பிரதானமாக எழுப்பப்பட்ட வாதம், கருணை மனுக்களை பைசல் செய்ய 11 ஆண்டுகள் நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டது தான். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ் பெற்றுக் கொண்டனர். இவ்வழக்கில், சட்ட அம்சங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது. மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படுகின்றன. மனுதாரர்கள் கோரியபடி, இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுக்களுக்கு எட்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.

ஒட்டு மொத்த இந்தியாவும் உற்றுநோக்கும் இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதில் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை பரிசீலிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஜனாதிபதிக்கு எவ்வித கால காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம், சென்னை ஐகோர்ட்டுக்கு பதிலளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment