Saturday, August 27, 2011

மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டுவதா? ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும்; தங்கபாலு பேட்டி!

Saturday, August 27, 2011
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை, அதன்வழி நீதிமன்ற தீர்ப்பினை நிறைவேற்ற 20 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் தடுக்கப்பட்ட நீதி இப்பொழுது செயல்வடிவம் பெறும்போது அதனை தடுப்பதற்கு பல்வேறு கோணங்களில் சில தலைவர்கள், சில கட்சிகள் அறிக்கை விடுவதும், அதற்காக போராடுவதாக அறிவிப்பதும் நாம் எங்கே போகிறோம் என்ற கேள்வி ஒவ்வொரு தனிமனிதனும், ஒவ்வொரு கட்சியும், ஏன் அதன் தலைவர்களும் தொண்டர்களும் எண்ணிப் பார்க்க வேண்டிய நேரமிது.

சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற இந்தியாவில் சட்டம் வழங்கிய தீர்ப்புகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமையாகும். தலைவர் ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்தம் அப்பா, அம்மா, உறவினர்கள், மனைவி மற்றும் உறவினர்கள் என்று அவர்களுக்காக அவர்கள் வாதாடுவது தனிப்பட்ட முறையில் இயல்பான ஒன்று.

இன்றைக்கு தங்கள் கட்சியின் தலைவர் அல்லது தங்கள் குடும்பத்தின் தலைவர் எவராவது ராஜீவ்காந்தியை போல படுகொலை செய்யப்பட்டிருந்தால் அதற்குப்பின் படுகொலையாளர்கள் நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றிருந்தால், அப்படி தண்டனை பெற்றவர்களை விடுவிக்க வேண்டுமென்று அந்த கட்சித் தலைவர் மற்றும் அந்த கட்சியை சார்ந்த தொண்டர்கள், அந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்பட வேண்டுமென்று கூறுவார்களா? அல்லது மன்னிப்பு வழங்க வேண்டு மென்று மன்றாடுவார்களா? அல்லது ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா? இந்தியாவில் தொடர்ந்து ஜனநாயகமும், சுதந்திரமும் நிலைக்க வேண்டுமானால் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்.

ஒருசிலருக்காக சட்டம் வளைக்கப்படுமேயானால், அல்லது சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்படுமேயானால் இந்தியாவில் மீண்டும் 65 ஆண்டுகளுக்கு பின்னோக்கிதான் செல்ல வேண்டும். கடமைகளை மறந்து விடாமல் தொடர்ந்து ஜன நாயக நெறிகளை காப்பதற்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம். இது ஒன்றுதான் ஒவ்வொரு தமிழின மக்களையும், இந்திய மக்களையும் பாதுகாத்து பண்போடு நடந்து வர வழியாகும். வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு தங்கபாலு கூறினார்.

இதுகுறித்து சத்திய மூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களிடம் கூறிய தாவது:-

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில நிகழ்வுகள் நடக்கிறது. ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்களை சில அரசியல் கட்சிகள், சில சுயநலவாதிகள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இது ஆபத்தானது.

ராஜீவ் கொலையாளிகளுக்கு சட்டம் வழங்கிய தீர்ப்புபடி தூக்கில் போட வேண்டும். இதை நிறை வேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமை. கொலையாளிகள் 3 பேரும் எல்லா மேல்முறையீடுகளையும் கடந்து வந்து விட்டார்கள். எனவே தண்டனையை நிறைவேற்றத் தான் வேண்டும்.

கேள்வி:- இது பழிக்கு பழி ஆகாதா?

பதில்:- காங்கிரஸ் யாரையும் பழிவாங்கும் கட்சி அல்ல. நாங்கள்தான் எங்களை அழித்து கொண்டுள்ளோம். இந்திரா, ராஜீவை இழந்துள்ளோம். இன்னும் இழக்க என்ன உள்ளது?

கே:- இந்திரா கொலையாளிகள் கூட மன்னிக்கப்பட்டார்கள். ராஜீவ் கொலையில் சிக்கியவர்கள் அப்பாவு தமிழர்கள் என்பதால் மன்னிக்க கூடாதா?

ப:- நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பார்த்து பேசவில்லை. எல்லாம் ஒரே தேசம்தான். தனிநபர்களுக்கு காங்கிரஸ் எதிரி அல்ல.

கே:- ஒரு கொலைக்கு கொலைதான் தீர்வா?

ப:- அது தீர்வல்ல. ஆனால் சட்டத்துக்கு வேலை கிடையாதா? அது தன் கடமையை செய்ய வேண்டும் அல்லவா?

கே:- தி.மு.க. தலைவர் கலைஞர் கூட மரண தண்டனை தவிர்க்கப்பட வேண்டும் என்று தனிப்பட்ட பொது கருத்தாக ஏற்கனவே கூறி உள்ளாரே.

ப:- அது அவரது கருத்து.

நாங்கள் எங்கள் நிலைப் பாட்டை கூறி உள்ளோம்.

கே:- எல்லா தூக்கு தண்டனைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?

ப:- சட்டம் என்ன சொல்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டும் என்பது என் கருத்து.

கே:- மாணவர்கள் போராட்டம் தீவிரமாகிறதே.

ப:- அவர்களுக்கு அரசியல் தெரியாது. சில அரசியல் கட்சியும், சுயநலவாதிகளும் தவறான பாதைக்கு அவர்களை அழைத்து செல்கிறார்கள்.

கே:- ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்கிறீர்கள். ஆனால், இலங்கை தமிழர்களை கொடூரமாக கொலை செய்த அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் காங்கிரஸ் வரவேற்பு கொடுக்கிறதே?

ப:- இலங்கை வன்முறையை காங்கிரசும் கண்டித்துள்ளது. எங்கு படுகொலை நடந்தாலும் அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment