Wednesday, August 31, 2011

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு விசா மறுப்பு : ஐ.நா சபையில் முறையீடு!

Wednesday,August,31,2011
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத்தமிழர்கள் தங்களுக்கு விசா வழங்குவதற்கு மறுக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு 38 குடியேற்ற அகதிகள் இவ்வாறு நேரடியாக மனு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறினோம். தொடர்ந்து பீதியில் வாழும் தாங்கள் எந்த அளவுக்கு, அடைக்கலம் அளிக்கும் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்போம் என அகதிகளில் ஒருவரான சுப்பிரமணியம் கோகுலகுமார் கேள்வியெழுப் பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. இருப்பினும் தங்களை பயங்கரவாதிகள் என குறிப்பிட்டு தஞ்சம் அளிக்க மறுப்பது வேதனையாக உள்ளது என்று மற்றொரு இலங்கைத் தமிழர் குறிப்பிட்டுள்ளார். கொலைக் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கலாம். ஆனால், எவ்வித குற்றமும் செய்யாத தங்களுக்கு எவ்வளவு காலம் சிறைத் தண்டனை என தெரிவிக்காமல் அடைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிட்னி பல்கலைக்கழக சட்டத்தரணி ஒருவர் குறிப்பிடுகையில்:

இலங்கையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வசித்த மக்களில் பலருக்கும் விடுதலைப் புலிகளைப் பற்றி நன்கு தெரியும். இவர்களில் சிலருக்கு புலிகளுடன் நெருங்கிய தொடர்பும் உள்ளது என்றார்.

இருப்பினும் தஞ்சம் கோரியுள்ள 38 பேருக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தஞ்சம் கோரியுள்ளவர்களில் மூன்று குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப முடியாது. ஏனெனில் இவர்கள் நம்பகமான அகதிகள் என மதிப்பிடப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து எவ்வித நடவடிக்கையையும் அவுஸ்திரேலிய அரசு எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment