Monday, August 22, 2011

அரசாங்கத்தையும் கூட்டமைப்பையும் நம்பி எவ்விதமான பிரயோசனமும் இல்லை தமிழ் மக்கள் மாற்றுவழிகளில் போராட வேண்டும்-டில்வின் சில்வா!

Monday, August 22, 2011
அரசாங்கத்தையும் கூட்டமைப்பையும் நம்பி எவ்விதமான பிரயோசனமும் இல்லை. எனவே தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க மாற்றுவழிகளில் போராட வேண்டும். என்று ஜே.வி. பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் இலங்கைக்கு எதிரான தலையீடுகளும் அழுத்தங்களும் அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல நடிப்புகளை முடித்து இறுதியாக மர்ம மனிதர்களை காட்டி அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களையும் குட்டிச் சுவராக்கியுள்ளது. அரசாங்கத்திடம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக டில்வின் சில்வா மேலும் கூறுகையில்,

அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நீண்ட காலமாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டே இருந்தது. இப் பேச்சுவார்த்தைகள் வெறும் ஏமாற்று வேலை என்று ஜே.வி.பி. கூறியிருந்தது.

தற்போது அது வெளிப்பட்டுள்ளது. இதுவரை காலமும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவும் சர்வதேச நாடுகளுக்கு காட்டிக் கொள்வதற்காகவும் மாத்திரமே இரு தரப்பினராலும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.

தற்போது அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை முறிந்துள்ளது. இது சற்று எச்சரிக்கையான விடயமாகும். ஏனென்றால் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே இந்தியா உட்பட அனைத்து சர்வதேச நாடுகளினதும் விருப்பமாகும்.

பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டமையால் அந்த நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. தற்போது பேச்சு வார்த்தையின் நிலை கேள்விக் குறியாகியுள்ளதால் சர்வதேச நாடுகள் தலையிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் உறுதியான தீர்வுத் திட்டம் கிடையாது.

ஏனைய தரப்புகள் முன் வைப்பதையும் அரசு ஏற்றுக் கொள்ளாது. பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவே அரசாங்கம் முயற்சிக்கும். இதில் ஒன்றுதான் மர்ம மனிதர்களின் நடிப்புமாகும். ஜே.வி.பியை பிடித்தவர்களுக்கு உள்ளூரில் நடமாடும் மர்ம மனிதர்களை பிடிக்க முடியாமல் இல்லை.

இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக அரசாங்கம் தனது சர்வாதிகார கட்டமைப்பை விஸ்தரித்துக் கொண்டு வருகின்றது. அது மட்டுமன்றி மர்ம மனிதர்களை காட்டி எரிவாயு உட்பட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரித்துக் கொள்கின்றது. எனவே அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக சீரழித்து வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment