Wednesday, August 31, 2011

வேலூர் சிறையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் கண்காணிப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டன விதிகள் தளர்வு!

Wednesday,August,31,2011
வேலூர்: வேலூர் சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற 8 வாரத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதால் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதையடுத்து, செப்டம்பர் 9ம் தேதி மூவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, சிறைக்குள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டது. சிறை விதிகளின்படி தூக்கு தண்டனை கைதிகள் தனி அறையில் அடைக்கப்பட்டனர்.

3 பேரையும் சிறைக் காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணித்தனர். மூவரையும் சந்திக்க வரும் பார்வையாளர்கள் பேசும் போதும் சிறை காவலர்கள் உடனிருந்தனர். சிறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தினமும் மூவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். விடுமுறை நாட்களிலும் தூக்கு தண்டனை கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்கவும், சிறப்பு உணவுகள் வழங்கவும் அனுமதிக்கப்பட்டன. இதற்கிடையில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் நேற்று விசாரித்து தூக்கு தண்டனையை 8 வார காலத்துக்கு நிறுத்திவைக்க உத்தரவிட்டனர். தூக்கு தண்டனை நிறுத்தப்பட்ட உத்தரவு நேற்று வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜீவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள், கண்காணிப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. அவர்கள் மற்ற தண்டனை கைதிகளைப் போல நடத்தப்பட்டனர். மூன்று பேரையும் இனி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே உறவினர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment