Wednesday, August 24, 2011
கடந்த முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பயங்கர வாதத்தை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்திய உங்களுக்கு ஏன் இந்த மர்ம மனிதர்களை கண்டு பிடிக்க முடியாமலுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.சுபைர் கேள்வி எழுப்பினார்.
இன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற மர்ம மனிதர்கள் பற்றி எற்பட்டுள்ள அச்ச நிலை தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திலேயே காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் மேற்படி கேள்வியினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் எழுப்பினார்.
சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஆகிய அமைப்புக்கள் நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்து தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக எடுத்துக்கூறியது.
இதனடிப்படையில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாயராஜபக்ச மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை புத்தளம் கண்டி குருநாகள் மாவட்டங்களிலுள்ள பள்ளிவாயல் சம்மேளன பிரதி நிதிகளை அவரது அமைச்சுக்கு விஷேட விமானத்தின் மூலம் அழைத்து அவர்களை இன்று மாலை சந்தித்தார். இதன் போது அங்கு நடை பெற்ற கூட்டத்தில் முப்படைத்தளபதிகள், கிழக்கு மாகாண படை அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு காத்தான்குடியில் இடம் பெற்ற சம்பவம் குறித்து சம்மேளன தலைவர் சுபைர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முன்னிலையில் விபரித்தார். காத்தான்குடியின் அயல் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு காத்தான்குடியிலுள்ள பலரின் மோட்டர்சைக்கிள்கள், வாகனங்கள், உடமைகள் படைத்தரப்பால் சேதப்படுத்தப்பட்டன, பலர் தாக்கப்பட்டு காயப்பட்டனர் என சம்மேளன தலைவர் சுபைர் எடுத்துக்கூறினார்.
இக் கூட்டத்தில் மாவட்ட ரீதியாக ஒருவருக்கு மாத்திரமே கருத்து தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ச பாதுகாப்பு படை வீரர்களின் தளங்களை, பொலிஸ் நிலையங்களை தாக்குவதும் தாக்க முற்படுவதும் கடுமையான குற்றமாகும். இவ்வாறான செயல்களை பயங்கர வாத செயல்கள் என்றே கருதி பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கையே இதற்கும் எடுக்க வேண்டியுள்ளது. பொலிசார், மற்றும் பாதுகாப்பு படை வீரர்களை தாக்குவது அவர்களை கொலை செய்வது பெரும் குற்றமாகும். சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது. இந்த கிறீஸ் மனிதன் விவகாரத்திற்கும் படைத்தரப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சமாதானத்தை வலுப்படுத்தவே படையினர் விரும்புகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள சமாதானத்தை படையினர் ஏன் சீர் குலைக்க வேண்டும்?
இராணுவத்தினர் படை வீரர்கள் சமாதானத்தை அனுபவித்து உல்லாசமாக இருப்பதை விரும்பும் போது சமாதானத்திற்கு எதிராக இவ்வாறு செய்ய வேண்டிய தேவை எதுவுமில்லை. பன்றி இறைச்சி சாப்பிடாதவர்களின் இரத்தம் ஜனாதிபதிக்கு தேவையென்று கூறுகின்றனர். நானும் பன்றி இறைச்சி சாப்பிடதாவன் தான் நானே ஜனாதிபதிக்கு இரத்தம் கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றேன்.
சில சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. அப்படியானால் விஷேட பொலிஸ் குழுவை நியமித்து விசாரணை நடாத்துவோம். ஒரு சிறிய சம்பவத்திற்காக பொலிசாரை கொலை செய்யும் அளவுக்கு செல்லக் கூடாது. சட்டத்தை கையில் எடுப்பவர்கள் விடயத்தில் மிக கடுமையான சட்டத்தை பாதுகாப்பு தரப்பினர் எடுப்பார்கள் என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளன தலைவர் சுபைர் காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் போது 20 மோட்டார் சைக்கிள்கள் சேதமாக்கப்பட்டதாக கூறியதற்கு அவர்களுக்கு இருபது மோட்டர் சைக்கிள்கள் தருகின்றேன் எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
இங்கு சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவரும் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் இதனை ஏற்பாடு செய்தமைக்காக நன்றி தெரிவித்ததோடு தற்போதுள்ள நிலை தெடர்பாகவும் எடுத்துக் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சில் இதையடுத்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடை பெற்றது இங்கு இப்தார் நடைபெற்றது இது தான் முதற்தடவையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment