Tuesday, August 30, 2011

போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் பயணம் 4 இலங்கை தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

Tuesday, August 30, 2011
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை தனியார் விமானம் ஒன்று சென்னைக்கு வந்தது. அதில் இருந்து இறங்கிய 4 வாலிபர்கள் மொட்டையடித்து இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது 4 பேரும் போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் போரூரை சேர்ந்த ராஜேந்திரன், கும்மிடிப் பூண்டியை சேர்ந்த சசிகுமார், ஸ்ரீராம், திருச்சி கே.கே.நகரை சேர்ந்த செந்தூரன் என்பதும் 4 பேரும் அங்குள்ள அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்பதும் தெரியவந்தது.

அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, சிங்கப்பூரை சேர்ந்த ஏஜெண்டு ஜீவா என்பவர் எங்களிடம் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி தலா ரூ.2 1/2 லட்சம் வாங்கிக் கொண்டு போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் அழைத்துச் சென்றார்.

பின்னர் அங்குள்ள ஓட்டலில் 4 நாட்கள் தங்க வைத்தார். பின்னர் எங்களை ஓட்டலில் விட்டு விட்டு தப்பி சென்று விட்டார். அங்கு அனாதையாக திரிந்த எங்களை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து 45 நாட்கள் சிறையில் அடைத்தனர். ஜெயிலில் இருந்து வெளிவந்ததும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். இங்கு வந்ததும் விமான நிலைய அதிகாரிகள் நாங்கள் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக கூறி கைது செய்து விட்டனர் என்றனர். பிடிபட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment