Tuesday, August 23, 2011

28 வயதில் புரட்சியால் பிடித்த ஆட்சியை 69 வயதில் இழந்தார் கடாபி:42 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது!

Tuesday, August 23, 2011
லிபிய ராணுவத்தில் வீரராக இருந்த கடாபி, 1965ல் பெங்காசி ராணுவ பல்கலைக்கழக அகாடமிக்கு வந்தார். அங்கிருந்து 1966ல் பிரிட்டன் ராயல் மிலிடரி பயிற்சிக்கு சென்றார். மீண்டும் படைக்கு திரும்பிய அவர், தனது ஆதரவாளர்களை திரட்டினார். துருக்கியில் சிகிச்சைக்கு லிபிய மன்னர் இட்ரிஸ் போயிருந்தபோது புரட்சி மூலம் 1969ல் ஆட்சியை கவிழ்த்தார் கடாபி.

லிபிய அரபு குடியரசு என்று அறிவித்தார். முப்படை தளபதியாகவும், ஆளும் கவுன்சில் தலைவராகவும் ஆனார். 1970 &72 பிரதமராகவும், ராணுவ அமைச்சராகவும் இருந்தார். 1979ல் ஆட்சியாளரானார். 1911 &1951 வரை இத்தாலியை ஆட்சி செய்த லிபியாவின் மன்னராட்சி முறையை ஒழிப்பதாக கூறியவர், தொடர்ந்து அதிபராக தானே நீடித்தார். ஏழைகளுக்கு அடிப்படை வாழ்க்கை வசதிகளை அளிப்பதாக கூறிய அவரது குடும்பம் கடந்த 42 ஆண்டுகளில் ஏராளமான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பிப்ரவரியில் புரட்சி படை தோன்றி கிளர்ச்சி தொடங்கியது. அதனால் 28 வயதில் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்த கடாபி அதே புரட்சிக்கு 69 வயதில் ஆட்சியை ஞாயிறன்று இழந்தார்.

புரட்சி படை வசமானது லிபியா திரிபோலி, ஆக.23: லிபியாவில் புரட்சி படையிடம் ஆட்சி வசமானது. 42 ஆண்டுகள் ஆண்ட அதிபர் கடாபி அரசு வீழ்ந்தது. அவரது படையினர் தலைதெறிக்க தப்பி ஓடி மறைந்தனர். கடாபியை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. அவருக்கு சதாம் உசேனின் கதி ஏற்படும் எனத் தெரிகிறது.

எண்ணெய் வளம் கொழிக்கும் லிபியாவை கடந்த 42 ஆண்டுகளாக தன்பிடியில் வைத்திருந்தவர் அதிபர் கடாபி. வயது 69. கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது ஆட்சியில் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் தலைமையில் புரட்சி படை அமைந்தது. கடந்த பிப்ரவரியில் கடாபிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது. அதை ஒடுக்க ராணுவத்தை ஏவினார் கடாபி. இருதரப்புக்கும் பயங்கர மோதல் நீடித்தது.

புரட்சி படைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தலையிட்டு கடாபியை பதவி விலக வலியுறுத்தினர். மறுத்த அவர், கடைசி லிபியர் இருக்கும் வரை அன்னிய படைகளையும், எதிரிகளையும் எதிர்த்து போராடுவேன் என்றார். இதையடுத்து, ஐ.நா. அனுமதி பெற்று புரட்சி படைக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் கடாபி ஆதரவு ராணுவம் மீது தாக்குதல் நடத்தின.

இந்நிலையில், கடந்த 8 மாதமாக நீடித்த சண்டை, கடந்த சில நாட்கள் முன் தலைநகர் திரிபோலியை நெருங்கியது. அதை புரட்சி படையினர் சுற்றி வளைத்தனர். அதிபர் கடாபியின் மாளிகையை குறி வைத்து நேட்டோ படைகளும் வான்வழி தாக்குதல் நடத்தின. அதில் மாளிகை இடிந்தது. கூடாரங்கள் நாசமாகின. திரிபோலியை பிடிக்க புரட்சி படையினர் மும்முனை தாக்குதல் நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை தீவிரமடைந்த தாக்குதலில் கடாபி ஆதரவு படையினர் பின்வாங்கி ஓடினர். மோதலில் பலர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் தப்பி தலைமறைவாகினர். இதையடுத்து, அதிபர் மாளிகையை புரட்சி படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொடி நாட்டினர்.

இந்த வெற்றியை லிபியா முழுவதும் கடாபி ஆட்சியில் விரக்தி கொண்டிருந்த மக்களும், புரட்சி படையினரும் இளைஞர்களும் கொண்டாடி வருகின்றனர். கடைசி கட்ட தாக்குதலில் கடாபியின் 3 மகன்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், கடாபியின் இருப்பிடம் பற்றிய தகவல் நேற்றிரவு வரை தெரியவில்லை. கடாபி வெளிநாடு தப்பியிருக்கலாம் என்றும், பதுங்கு குழியில் லிபியாவிலேயே பதுங்கியிருக்கலாம் என்றும் இருவேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பிடிபட்டால் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனை போல தூக்கிலிடப்படலாம் என கூறப்படுகிறது.

விசாரணை எங்கே?

கடாபி உயிருடன் பிடிபட்டால் விசாரணை எங்கே நடைபெறும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டில் சர்வதேச நீதிமன்ற வழக்குகளில் கடாபி தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். எனவே, அவர் பிடிபட்டால் சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவாரா அல்லது லிபிய நீதிமன்றங்களில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை பெறுவாரா என தெரியவில்லை.

3 மகன்கள் சிக்கினர்

கடாபியின் மாளிகையில் நடந்த உச்சக்கட்ட தாக்குதலில் அவரது 3 மகன்கள் உயிருடன் பிடிபட்ட நிலையில், கடாபியை பிடிக்க முடியாமல் புரட்சி படை மற்றும் நேட்டோ பிடியினர் ஏமாற்றம் அடைந்தனர். திரிபோலி நகரின் பல பகுதிகளில் பதுங்கு குழிகளை தயாராக ஏற்படுத்தி அவற்றில் ஏதாவது ஒன்றில் கடாபி பதுங்கியிருக்கலாம் என ஒரு தகவல் கூறுகிறது.

அவர் வெளிநாடு தப்பியிருக்கலாம் என்றும் இதய நோய்க்காக அவர் அடையாளம் தெரியாத நபராக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் வெவ்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிபோலியின் பாப் அல் ஆசிசியா என்ற தனது முப்படை மையத்தில் அவர் பதுங்கியிருக்கலாம் என்று பிபிசி செய்தி தெரிவித்தது.

காட்டாட்சி முடிந்தது: ஒபாமா

லிபியா விடுதலை பெற்றது. கடாபியின் தவறான ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த இரவு... லிபியாவுக்கு திருப்பு முனையானது. கடாபி அரசு சீர்குலைந்துள்ளது. எல்லா அதிகாரங்களையும் கைவிட்டு சட்டத்தின் முன் நிற்பதை தவிர அவருக்கு வேறு வழியில்லை’’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

அடைக்கலம் தாங்க’

தனது ஆட்சி கவிழப் போவதை கடந்த வாரமே உணர்ந்திருந்தார் கடாபி. எனவே, புரட்சி படை, நேட்டோ படையின் கையில் சிக்காமல் வெளிநாடு தப்ப யோசித்தார். எகிப்து, மொராக்கோ, துனிசியா, அல்ஜீரியா, தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு அவர் தூது விட்டதாக தகவல் வெளியானது. எனினும், மற்ற நாடுகள் மவுனம் காக்க, தென் ஆப்ரிக்கா மட்டும் திட்டவட்டமாக ‘நோ’ சொல்லி விட்டது. கடாபியை அனுமதிக்க யோசித்தாலும், லிபிய பிரதமர் அல் பாக்தாதி, அரசு டிவி யூனியன் தலைவர் அப்துல்லா மன்சூர் ஆகியோருக்கு மட்டும் துனிசியா அடைக்கலம் அளித்து விட்டது.

No comments:

Post a Comment