Thursday, July 14, 2011பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட் நீதிபதி இன்று உத்தரவிட்டார். 1991 முதல் 96-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அதை விசாரிக்க சென்னையில் தனி கோர்ட் அமைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 250-க்கும் அதிகமான சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் 2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அப்போது திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு, சென்னை தனி கோர்ட்டில் நடக்கிறது. முதல்வராக அவர் இருப்பதால் அந்த வழக்கை இங்கே விசாரிப்பதில் நீதி கிடைக்காது. எனவே வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.
அதை ஏற்று, பெங்களூரில் தனி கோர்ட் அமைத்து விசாரணை நடத்த 2004-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது. அங்கு ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மீதான விசாரணை 2004-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து, வக்கீல் வாதம் தொடங்கி உள்ளது. இதற்கிடையே, அரசு தரப்பு வக்கீல் ஆச்சாரியா, தனி கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313-வது விதிப்படி வழக்கில் யார் குற்றம் சாட்டப்படுகிறார்களோ அவர்கள் வழக்கு விசாரணையின்போது ஒருமுறையாவது கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.
ஆனால், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா இதுவரை கோர்ட்டில் ஆஜராகவில்லை. இது கோர்ட்டை அவமதிக்கும் செயலாக இருக்கிறது. அவர்கள் கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் கோர்ட்டில் ஆஜராக நேரமில்லை. எனவே, நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரினார். இதற்கு அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனய்யா, ‘வரும் 27-ம் தேதி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment