Wednesday, July 20, 2011

சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை!

Wednesday, July 20, 2011
சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி ஜோஸ் லுயிஸ் டயஸிற்கும், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணேவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் மனித உரிமை விவகாரங்களுக்கு இலங்கை அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருவதாக பாலித கொஹணே தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு அரசாங்கம் பின்நிற்காது என அவர் தெரிவித்துள்ளார்.

ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த 110 படை அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், அவர்கள் உடனடியாக மீள அழைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணைகளின் பின்னர் மீள அழைக்கப்பட்டவர்களில் பலர் தண்டிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நாடுகளைப் போன்றே சட்டத்தின் அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செனல்4 ஊடகம் மற்றும் தாருஸ்மன் அறிக்கை ஆகியன போலியானவை எனவும் எந்த விதமான அடிப்படையுமின்றி போலித் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளின் பிரச்சாரப் பிரிவினால் இவ்வாறு போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச அனர்த்தக் குழு போன்ற சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களுக்கு துணை போவதன் மூலம் அவற்றின் நன்மதிப்பிற்கு களங்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சரியான ஆதாரங்கள் இன்றி இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதியின் கருத்துக்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment