Sunday, July 17, 2011

இராணுவம் தேர்தல் கடமையில் இல்லை!

Sunday, July 17, 2011
எதிர்வரும் 23 ஆம் திகதி வடமாகாணத்தில் இடம்பெறும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போது, இராணுவம் தேர்தல் பணிகளுக்காக நிறுத்தப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரை தேர்தல் கடமைகளில் அமர்த்த வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த வேண்டுகோளுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே தேர்தல் செயலகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

தேர்தல் சட்டங்களுக்கு அமைய காவல்துறையினரால் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் தருணத்தில், தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்பின் பேரில் மாத்திரமே இராணுவத்தினரை பணியில் அமர்த்த முடியும்.
அதேவேளை கடந்த 13 ஆம் திகதி பிரதி தேர்தல்கள் ஆணையாளர் குடாநாட்டுக்குச் சென்று வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தை ஒன்றை நடத்தியிருந்தார்.

இந்த பேச்சுவார்தைகள் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் எமது செய்தி பிரிவு வினவியது.

காவல்துறையினரோ அல்லது இராணுவத்தினரோ தேர்தல் சட்டங்களை மீறுவதாக அரசியல் கட்சிகள் சந்தேகிக்கும் பட்சத்தில் உரிய அதிகாரிகளிடம் முறையிட முடியும் என இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment