Sunday, July 17, 2011

பொதுநலவாய அமைப்பின் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற உடன்பாடு கையெழுத்து!

Sunday, July 17, 2011
பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்துலக குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிக ஆழமான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் வழங்க வேண்டும் என்ற புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துடன் பொதுநலவாய அமைப்பு இவ்வாறானதொரு உடன்பாட்டை செய்துள்ளது.

அனைத்துலக குற்றவியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் சட்டத்துறை அமைச்சர்களின் சந்திப்பில் 54 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சட்டத்துறை அமைச்சர்கள், பிரதம நீதியரசர்கள், மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீதான சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் மிகப்பரந்த அளவில் மேற்கொள்ளப்படுமிடத்து அவற்றை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பளிக்கின்ற முதலாவது பாதுகாப்பு எல்லையாக அந்தந்த நாடுகளின் நீதிசார் அதிகாரங்களே முதல்நிலை வகிக்கின்றன.

இங்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்று என்பது ஒரு பாதுகாப்பு வலையாகும். இறுதித் தீர்வை எட்டுகின்ற ஒரு இடமே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமாகும்“ என்று புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்ட பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் தலைமை நீதியரசர் சொங் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அனைத்துலக ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியைப் பெற்றுக்கொடுத்தல், மனிதப் படுகொலைகளைத் தடுத்தல், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் நடைபெறாது தடுப்பதை உறுதிப்படுத்தல் என்பன அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் பிரதான கடமைகள் என்று பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளாகி நாம் அனைத்துலக குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிக ஆழமான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் வழங்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம் என்பதை புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்துக் காட்டுகின்றது.

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கும் , அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் தலைமை நீதியரசருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்பாடானது உரோமச் சட்டத்திற்கேற்பவே நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த சட்டத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் ரவூப் ஹக்கீமும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment