Wednesday, July 20, 2011மும்பை :ராகுல் காந்தி பாதி இந்தியர், பாதி இத்தாலியர்’ என்று இந்தி நடிகை கேத்ரினா கைப் கூறியது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கேத்ரினா மன்னிப்பு கேட்டுள்ளார். ‘பூம்’ சினிமாவின் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தவர் நடிகை கேத்ரினா கைப் (27). தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். நடிக்க வரும் முன்பு மாடலிங் செய்துகொண்டிருந்தார். இவரது தந்தை முகமது கைப், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். அம்மா சுசான் டர்கோட், இங்கிலாந்தை சேர்ந்தவர். இருவருமே இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள். அப்பா, அம்மாவின் பெயர்களை இணைத்து ‘கேத்ரினா கைப் டர்கோட்’ என்றே தனது பெயரை முக்கிய ஆவணங்களில் கேத்ரினா குறிப்பிடுவார்.
அதென்ன டர்கோட்? வெளிநாட்டு பெயராக இருக்கிறதே’ என்று அவ்வப்போது நிருபர்கள் கேட்பார்கள். ‘அது அம்மா பெயர்’ என்பார் கேத்ரினா. சமீபத்தில் ஒரு பேட்டியில் நிருபர் இதுதொடர்பாக கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த கேத்ரினா, ‘‘அப்பா ஆசியர், அம்மா இங்கிலாந்துக்காரர் என்று நான் ஏதோ வெட்கப்படுவதாக நினைத்து எல்லாரும் கேட்கிறார்கள். பாதி ஆசியன் என்பதில் என்ன அகவுரவம்? நான் மட்டும்தானா பாதி ஆசியன். ராகுல்காந்தி இருக்கிறாரே. பாதி இந்தியன், பாதி இத்தாலியன். எனக்கு இதில் பெருமைதான். அம்மா இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதை மறைக்க எனக்கு எந்த அவசியமும் இல்லை’’ என்று படபடவென பொரிந்து தள்ளிவிட்டார்.
காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் ராகுல் காந்தி பற்றி அவர் கூறியது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரியிடம் கேட்டதற்கு, ‘‘யாரது கேத்ரினா கைப்? அவர் யாரென்றே எனக்கு தெரியாது. அப்புறம், காமெடி நடிகர் ஏதோ சொல்லியிருக்கிறாரே என்று அதுபற்றி கருத்து கேட்பீர்கள். இதுபற்றி கருத்து சொல்லி அரசியலின் கண்ணியத்தை குறைக்க விரும்பவில்லை’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தான் தெரிவித்த கருத்து தொடர்பாக கேத்ரினா கைப் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ‘‘சாதாரணமாகத்தான் சொன்னேன். யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இதை பெரிதுபடுத்த வேண்டாம்’’ என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment