Friday, July 15, 2011

மும்பை குண்டு வெடிப்பு: தீவிரவாதிகள் 3 பேர் அடையாளம் தெரிந்தது; தலை சிதறி பலியானவர் மனித வெடிகுண்டா?.

Friday, July 15, 2011
மும்பையில் நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பில் 21 பேர் பலியானார்கள். 133 பேர் காயம் அடைந்தனர். மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேசிய புலனாய்வு குழுவுடன் அவர்கள் ஒருங்கிணைந்து 12 தனிப் படைகளை உருவாக்கி பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மும்பையில் 3 இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் முதலில் ஒபரா ஹவுசிலும், பிறகு ஐவேரி பஜாரிலும் மூன்றாவதாக தாதரிலும் வெடிக்கும் வகையில் நேரத்தை கணக்கிட்டு வைக்கப்பட்டிருந்தது.

அமோனியம் நைட்ரேட் மற்றும் ஒரு வகை எண்ணை கலவையுடன் சைக்கிள் பால்ரைஸ்களும் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த குண்டுகளுடன் செல்போனை இணைத்து வெடிக்க வைத்துள்ளனர். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் தான் இந்த குண்டு வெடிப்புகளை நடத்தி இருக்க வேண்டும் என்று விசாரணைக் குழுவினர் சந்தேகிக்கிறார்கள். ஆனால் உறுதியான வகையில் இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. இதனால் சதிகாரர்கள் யார் என்பதை முடிவு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது.

கடந்த காலங்களில் குண்டு வெடித்ததும், ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கம் இ-மெயில் அல்லது போன் மூலம் பொறுப்பு ஏற்கும். ஆனால் இந்த தடவை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. தீவிரவாதிகள் வேண்டும் என்றே இப்படி மவுனமாக இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இந்திய முஜாகிதீன்கள் சமீபத்தில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு மும்பை நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு ஏற்பட்டதை உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். அவர்கள் இந்த வெடிகுண்டு தாக்குதலை ஒத்திகை போல நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே குண்டு வெடிப்பில் சிக்கிய ஒருவர் தலைசிதறி, உடல் முழுக்க மின் வயர்கள் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தார். தலை சிதறிப் போனதால் அவர் யார் என்று தெரியவில்லை. அவர் மனித வெடிகுண்டாக வந்த தற்கொலை தீவிரவாதியாக இருக்கலாம் என்று விசாரணைக் குழுவினர் சந்தேகிக்கிறார்கள்.

போலீசார் கவனத்தை திசை திருப்ப அந்த நபரை தீவிரவாதிகளே அனுப்பி கொன்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மும்பையில் 3 இடங்களில் வெடித்த குண்டுகள் அதி நவீனமாக தயாரிக்கப் பட்டிருந்தது தடயவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது. மிகவும் கை தேர்ந்த நிபுணர்களால் தான் இத்தகைய குண்டுகளை தயாரிக்க முடியுமாம். இதை எந்த தீவிரவாத இயக்கம் தயாரித்து இருக்கும் என்பதில் முரண்பாடு நிலவுகிறது.

உத்தரபிரதேசம், கர்நாடகாவில் உள்ள முஜாகிதீன் தீவிரவாதிகள் இந்த குண்டுகளை தயாரித்து இருக்கலாம் என்று தேசிய புலனாய்வுக் குழு கருதுகிறது. இதையடுத்து அந்த இரு மாநிலங்களுக்கும் தனிப்படையினர் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஏதாவது ஒரு வகையில் துப்பு கிடைக்குமா? என்று குண்டு வெடிப்புகளை பதிவு செய்த கண்காணிப்பு காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒபரா ஹவுசில் நடந்த குண்டு வெடிப்பு காட்சிகள் மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளன. குண்டு வெடித்த இடம் அருகே சுமார் ஒரு மணி நேரமாக 3 மர்ம மனிதர்கள் போனில் நீண்ட நேரம் பேசியபடி இருந்தனர்.

குண்டு வெடிப்பதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு அவர்கள் 3 பேரும் அவசரம், அவசரமாக புறப்பட்டு செல்வது கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அந்த 3 பேரும் முஜாகிதீன் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் முகத்தை படங்களாக வரைந்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment