Thursday, September 1, 2011

ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது-சுப்ரமணியம் சுவாமி!

Thursday,September,01,2011
ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது-சுப்ரமணியம் சுவாமி!

இந்திய அரசியல் யாப்பின் அடிப்படையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை அதில் இருந்து விடுதலை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி இதனை தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலையாளிகளின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததன் பின்னர், அவர்களை விடுவிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே இந்த கொலை வழக்குடன் தொடர்புடைய நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதுவும் இந்திய அரசியல் யாப்பு மீறி மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பில் இனியும் இந்தியா மிதநிலை போக்கை கடைபிடிக்க கூடாது என அவர் கோரியுள்ளார்.

இந்த நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, குறித்த மூன்று பேரையும் விடுவிக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு அதிகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உண்ணாவிரதம்!

Thursday,September,01,2011
வெலிக்கடை சிறைச்சாலையின் விளக்கமறியல் கைதிகள் இருவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த 02 கைதிகளும் நேற்று பிற்பகல் முதல் சிறைச்சாலையின் கூரை மேலேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

நீதவானொருவரை இடமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு புதிய ஒழுங்குவிதிகள்!

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மேலும் மூன்று புதிய ஒழுங்குவிதிகளை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எமது செய்தி பிரிவிற்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அவசர கால சட்டம் நேற்று நள்ளிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே பயங்கரவாத தடைச்சட்டத்தின் 27 வது சரத்துக்கமைய, மூன்று புதிய யோசனைகளை உள்ளடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று அல்லது எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் எனவும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளருடன் மோதல் நடிகர் கோவிந்தா மீது கொலை மிரட்டல் வழக்கு!

Thursday,September,01,2011
மும்பை : திரைப்பட தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான கோவிந்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரபல இந்தி நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான கோவிந்தா, தற்போது அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். இவர் ஒரு புதிய பிரச்னையில் சிக்கி இருக்கிறார். இந்தி திரைப்பட தயாரிப்பாளர் பிரவீன் கன்னா, தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க கோவிந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளார். அதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முன்பணம் வாங்கிய கோவிந்தா, கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் கன்னா புகார் செய்துள்ளார். இந்த பிரச்னை பற்றி பேசுவதற்காக இந்தி திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டம் கடந்த மாதம் 24ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள பாலிநாக்காவில் நடந்தது. அப்போது, கன்னாவை, கோவிந்தா மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி கார் ரோடு போலீசில் கன்னா புகார் செய்தார். அதன் பேரில் கோவிந்தா மீது போலீசார் அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பற்றி போலீசார் அவரிடம் விசாரிக்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 31 முகாம்களில் வாழ்ந்துவரும் அகதிகளை வரவழைக்கும் பணிகள் துரிதம்!

Thursday, September,1, 2011
வடபகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவுபெறும் கடைசிக் கட்டத்தை அடைந்தி ருக்கும் இவ்வேளையில் மீள்குடியேற்ற அமைச்சு, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 31 முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற பல்லாயிரக்கணக்கான மக்களை மீண்டும் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வந்து, மீள்குடியேற்றுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

யுத்தம் காரணமாக இந்த இலங்கைத் தமிழர்கள் கடந்த பலவருடங்களாகத் தங்கள் குடும்பத்துடன், தோணிகளில் சட்டவிரோதமாகவும், சட்டபூர்வமாகவும் இந்தியாவுக்கு பாதுகாப்பைத் தேடிச்சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது யுத்தம் முடிவடைந்து நாட்டில் மீண்டும் அமைதியும் சமாதானமும் திரும்பிக்கொண்டிருப்பதனால் அவர்கள் இலங்கை திரும்பி தங்கள் உறவுகளுடன், ஒன்றிணைந்து வாழ இப்போது அவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஒன்றிணைக்கப்பட்ட வலையமைப்பின் கீழ் இந்தத் தகவல்கள் பெறப்பட்டன. மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் உத்பல பஸ்நாயக்க, புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக தமிழ் நாட்டு முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களை மீண்டும் இங்கு அழைத்து வருவதற்கான ஒழுங்குகளைச் செய்து வருவதாகக் கூறினார்.

இந்த மக்கள் இலங்கை திரும்புவதற்குத் தேவையான ஆவணங்களை அவர்களுக்குத் தயார்படுத்திக்கொடுத்து, அவர்களை மீண்டும் நாடு திரும்புவதற்கான வசதிகளை துரிதப்படுத்துமாறு அரசாங்கம் சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்களுக்கு உடனடியாக இலங்கை திரும்புவதற்கான கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்பிலுள்ள அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமும் இந்த மக்களை இங்கு நெறியான முறையில் இங்கு அழைத்து வருவதற்கும், அவர்களை வடபகுதியில் மீள்குடியேற்றுவதற்கும் சகல உதவிகளை செய்து வருவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் உத்பல பஸ்நாயக்க தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் மக்களை தமிழ் நாட்டிலிருந்து இங்கு அழைத்து வருவதற்கு பல வெளிநாட்டு அரசாங்கங்கள், யூ.என்.எச்.சி.ஆர். அமைப்புக்கு நிதியுதவிகளை வழங்கி வருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூரில் இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் பேரில் 7 ஆயிரம் பேர் மட்டுமே மீள்குடியமர்த்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த ஏழாயிரம் பேரும் அடுத்த மூன்று மாதங்களுக்கு மீள்குடியமர்த் தப்படுவார்கள் என்று தெரிவித்த பஸ்நாயக்க, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் கொம்பாவில் பகுதியில் இவர்களை மீள்குடியமர்த்துவதற்காக 600 ஏக்கர் காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் நிறைவுபெறவிருப்பதனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடுகளை நிர்மானித்துக் கொள்வதற்காக 40 பரப்புக் காணி வழங்கப்படவுள்ளது.

யாழ் கோண்டாவிலில் மக்களால் பிடிக்கப்பட்டவரை படையினர் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

Thursday, September,1, 2011
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியினில் நேற்று சந்தேகத்திற்கிடமான நிலையில் வீடொன்றினுள் அருகில் புக முற்பட்ட ஒருவர் உள்ளுர் மக்களிடம் அகப்பட்டுக் கொண்டுள்ளார். அறையொன்றினுள் அடைத்து வைக்கப்பட்ட நபரை பொறுப்பேற்ற படையினர் பின்னர் பொலிஸாரிடம் சந்தேக நபரை கையளித்துள்ளனர்.

துவிச்சக்கர வண்டியினில் வந்திருந்ததாக கூறப்படும் சந்தேக நபர்களான இருவர் பழுதடைந்த தமது வண்டியை அருகிலுள்ள திருத்தக மொன்றினில் விட்டுள்ளனர். பின்னர் சத்தமின்றி அருகாக உள்ள பொதுமக்களுக்குச்சொந்தமான வீடொன்றினுள் உட்புக முற்பட்டுள்ளனர். இதைக்கண்ட வீட்டிலிருந்தவர்களும் அயலவர்களும் அபயக்குரல் எழுப்பியுள்ளனர்.

சந்தேக நபர்களான ஒருவர் தப்பித்திருந்த நிலையில் மற்றையவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். அதையடுத்து அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான பொதுமக்கள் சந்தேக நபரை தாம் நீதிபதி முன்னிலையிலேயே ஒப்படைப்போமென போராடத் தொடங்கினர்.

பொலிஸார் பல தடவைகளாக பேச்சுக்களில் ஈடுபட்ட போதும் அவர்கள் வசம் சந்தேக நபரை கையளிக்க மக்கள் மறுத்துவிட்டனர். இந்நிலையில் அங்கு வந்த உடுவிலில் உள்ள 511 படைப்பிரிவு கட்டளையதிகாரி சந்தேக நபரை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சந்தேக நபர் நாளை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடனேயே தாம் படையதிகாரியிடம் கையளித்ததாக பொதுமக்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டது.

இதிடையே குடாநாட்டின் பலபகுதிகளிலும் கிறீஸ் மனிதன் சர்ச்சை பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு புலிச் சந்தேக நபர்கள் பங்களுரில் கைது!

Thursday,September,01,2011
உலக அளவில் பாரிய கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு புலிச் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பங்களுர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மலேசியாவிலிருந்து இணையத்தின் ஊடாக தரவுகள் ஹெக் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு கோடி இந்திய ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடன் அட்டை மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மலேசியாவில் இருப்பதாகவும், இந்தியாவில் ஆறு முக்கியஸ்தர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

39 வயதான ஷியாம் மற்றும் 25 வயதான வாசீம் பாஸா ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலிகளுக்கு தாம் பணம் வழங்கியதாக சந்தேக நபர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.