Sunday, July 14, 2019

தமிழிசைக்கு தேசிய அளவில் பதவி... தமிழக பாஜக தலைவராகும் புதுமுகம்!

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசை நீக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்ற பாஜக தமிழகம், ஆந்திரா, கேரளாவில் மட்டும் படுதோல்வியை சந்தித்து. மேற்கு வங்கத்தில் வெற்றி வாகை சூடியது. தெலுங்கானாவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வாக்குகளை பெற்றது. இதனை அடுத்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தென் மாநிலங்களில் தனது கட்டமைப்பை வலுப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளாவில் பாஜகவை வலுவாக காலூன்றச் செய்ய பல்வேறு வியூகங்களை அமித் ஷா வகுத்து வருகிறார். அதன்படி தமிழக பாஜகவிற்கு புதுமுகம் ஒருவரை தலைவராக நியமிப்பது தொடர்பாக ஆலோசித்து வரப்படுகிறது.

ஜி.கே.வாசன் கட்சியை பாஜகவில் இணைத்து அவரை தமிழக தலைவர் ஆக்க அமித் ஷா ஆர்வம் காட்டினார். ஆனால் வாசன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிலேயே ஒழுங்காக செயல்பட்டதில்லை அவருக்கு பேச்சாற்றல் கிடையாது, செய்தியாளர்களை எதிர்கொள்ள முடியாது என்று இங்கிருக்கும் பாஜக நிர்வாகிகள் கொளுத்திப் போட அந்த முயற்சியை பாஜக மேலிடம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
 
அதே சமயம் இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக தமிழகம், தெலுங்கானா மற்றும் கேரளாவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் செயல் தலைவராக உள்ள ஜே.பி. நட்டா இந்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். ஜே.பி நட்டா தீவிர ஆர்எஸ்எஸ் அனுதாபி. அந்த வகையில் ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் உள்ளவர்களை தான் அவர் நிர்வாகிகள் தேர்வுக்கு முன்னிலைப்படுத்தி வருவதாக சொல்கிறார்கள்.
 
மேலும், கடந்த தேர்தலில் மட்டும் அல்லாமல் எந்த தேர்தலிலும் சாதிக்காத நிர்வாகிகளுக்கு டம்மி பதவியை கொடுத்துவிட்டு புதியவர்களை நியமிக்க நட்டா ஆர்வம் காட்டி வருகிறார். அதன் படி அவர் ஹிட் லிஸ்டில் முதல் பெயராக தமிழிசை பெயர் உள்ளதாக கூறுகிறார்கள். காரணம் 5 ஆண்டுகளாக தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை என்கிற ரிப்போர்ட் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல் ஹெச்.ராஜா, இல.கணேசன் போன்றோருக்கும் தமிழகத்தல் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் தோற்றுவிட்டார். எனவே புதியவரான ஒருவரை தலைவர் பதவிக்கு நியமிக்க நட்டா தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். இதுநாள் வரை அமித் ஷா ஆதரவில் தப்பி வந்த தமிழிசை இந்த முறை தப்ப முடியாது என்கிறார்கள். இதற்கிடையே தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் நான் தான் என்று வானதி சீனிவாசன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.

No comments:

Post a Comment