Wednesday, June 19, 2019

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர் உட்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் படுகொலையில் தொடர்புடையவர் உட்பட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். ஒரு வீரரும் வீரமரணம்  அடைந்தார்.தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்த்நாக்  மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக  பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று காலை  அப்பகுதியில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு  பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் அதிரடியாக சுட்டனர். பாதுகாப்பு படை
வீரர்களும் பதில் தாக்குதலில்  ஈடுபட்டனர். இதில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சஜாத் பாட், தவ்சீப் பாட் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்த சண்டையில் பாதுகாப்பு படையை  சேர்ந்த வீரர் ஒருவர் காயம் அடைந்தார். அவரை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் வீர  மரணம் அடைந்தார்.இது தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், ‘`தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட தீவிரவாதி சஜாத் பாட், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன்,’’ என்றார்.
 
முன்னதாக, நேற்று முன்தினம் இதே மாவட்டத்தின் அசாபால்  பகுதியில் பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற  துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் ஒருவர் கொல்லப்பட்டார். இது தவிர ராணுவ  அதிகாரி மற்றும் 2 தீவிரவாதிகள் படுகாயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்த  ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.சிகிச்சை பலனின்றி 2 வீரர்கள் மரணம்காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரிஹால் பகுதியில் நேற்று  முன்தினம் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் பயங்கரமான வெடிகுண்டுகளை வீசி  தாக்குதல் நடத்தினர். இதில் 9 ராணுவ வீரர்களும் பொதுமக்கள் இருவரும் காயம்  அடைந்தனர். படுகாயத்துடன் 92வது முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  வீரர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர்.

No comments:

Post a Comment