Friday, June 14, 2019

தமிழகத்தில் தாக்குதல் நடத்த பயங்கர சதி! கோவையில் 2ம் நாளாக அதிரடி ரெய்டு!

 தேசிய புலனாய்வு முகமையைத் தொடர்ந்து, கோவை மாநகர போலீசாரும் நேற்று மூன்று இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு போன்று தமிழகம் மற்றும் கேரளாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்த்ததும், என்.ஐ.ஏ.,வின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.இலங்கையில் கடந்த, ஏப்., 21, ஈஸ்டர் தினத்தன்று, கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த பயங்கர தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில், 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 500 பேர் காயமடைந்தனர். இக்கொடூர தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத இயக்கம் ஐ.எஸ். ஐ.எஸ்.,
 பொறுப்பேற்றது. அதுமட்டுமின்றி, தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகளின் படங்களையும் வெளியிட்டது.
 
இதுபோன்ற தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக முன்கூட்டிய எச்சரித்திருந்த இந்தியா உளவுத்துறை, தாக்குதல் சதிகாரர்களுடன் இந்தியாவிலுள்ள இளைஞர்களுக்கு, குறிப்பாக, கோவை இளைஞர்களுக்கு, சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்பு இருப்பதை கண்டறிந்து உஷார்படுத்தியது. இதையடுத்து, இலங்கை விரைந்த இந்தியா தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் குழுவினர், ரகசிய தகவல்களை சேகரித்து, டில்லி தலைமையிடத்துக்கு அனுப்பினர். இதையடுத்து, கேரள மாநிலம், கொச்சியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டிருக்கும் என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று முன் தினம் கோவை வந்தனர்.உக்கடம், அன்பு நகரை சேர்ந்த முகமது அசாருதீன்,32; போத்தனுார், திருமறை நகர், பேஸ் -2 பகுதியைச் சேர்ந்த அக்ரம் ஜிந்தா, 26; தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷேக் இதயதுல்லா, 38, குனியமுத்துாரைச் சேர்ந்த அபூபக்கர், 29 ; போத்தனுார் மெயின்ரோடு, உம்மர் நகரைச் சேர்ந்த சதாம் உசேன், 26, தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த இப்ராகிம், 28 ஆகியோர் வீடுகள் மற்றும் பணியாற்றும் இடங்களில், மாநகர போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.
 
 இவர்களில், முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டு கேரள கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டார். மற்றவர்கள் என்.ஐ.ஏ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, என்.ஐ.ஏ., தரப்பில் கூறப்படுவதாவது: விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்களின் வீடுகள் மற்றும் பணியாற்றும் இடங்களில் இருந்து, 14 மொபைல் போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ்கள், மூன்று லேப் டாப்கள், ஆறு மெமரி கார்டுகள், நான்கு ஹார்டிஸ்க் டிரைவ்கள், ஒரு இன்டர்நெட் டாங்கிள், 13 'சிடி' மற்றும் 'டிவிடி'கள், ஒரு எலக்ட்ரிக் பட்டன், 300 'ஏர்கன்' பெல்லட்கள், அமைப்புகளின் துண்டுபிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்., உள்ளிட்ட அமைப்புகளின் கொள்கைளை இளைஞர்கள் மத்தியில் பரப்பி, பயங்கரவாத செயலுக்கு ஆள் தேர்வு செய்து, தென்மாநிலங்களில் குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டிருந்தனர்.

இதில், முக்கிய நபராக செயல்பட்ட முகமது அசாருதீன், 'கலிபா ஜிஎப்எக்ஸ்' என்ற பெயரில், 'பேஸ்புக்' பக்கம் வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். முகமது அசாருதின், இலங்கை குண்டுவெடிப்பில் தற்கொலைப்படை பயங்கரவாதியாக செயல்பட்ட ஜாக்ரன் ஹாசிம் மற்றும் சில உறுப்பினர்களுடன், 'பேஸ் புக்' நண்பராக இருந்துள்ளார். சில தகவல்களையும் பரிமாறியுள்ளார். இது, தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு, என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.தொடரும் ரெய்டு:என்.ஐ.ஏ., போலீசார் நேற்று முன் தினம் கோவையில் சோதனை நடத்திய நிலையில், கோவை மாநகர போலீசாரும் தங்கள் பங்கிற்கு நேற்று மூன்று இடங்களில் சோதனை நடத்தினர். கோட்டை மேடு, வின்சென்ட் ரோடு, குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்த முகமது உசேன்,25 ; உக்கடம், அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான்,25; ஆத்துப்பாலம், கரும்புக்கடையை சேர்ந்த ஷேக் சபியுல்லா,27, ஆகியோர் வீடுகளில், ஒரே நேரத்தில், மூன்று பிரிவாக சென்று நேற்று சோதனை மேற்கொண்டனர். ஆறு மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில், பல முக்கிய ஆவணங்கள், மத உணர்வை துாண்டும் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து மூன்று பேர் மீதும், சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிடிபட்ட நபர்களை, போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.@block@மூவரின் பின்னணி என்ன? சோதனை நடவடிக்கை குறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகியோர், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் தீவிர ஆதரவளாளர்கள். இவர்கள் ஐ.எஸ்.ஐ. எஸ்.,சின் கொள்கைகள் மற்றும் தீவிரவாத செயல்களை இளைஞர்களிடத்தில், சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பியும், தீவிரவாத அமைப்புக்கு அடித்தளம் அமைத்து, அந்த அமைப்பு சார்பில் தீவிரவாத செயல்களை, கோவையில் அரங்கேற்ற சதி தீட்டம் தீட்டி வருவதாக தகவல் கிடைத்தது.

மேற்கண்ட நபர்கள், இலங்கையில் குண்டுவெடிப்பை நடத்திய பயங்கரவாதிகளை புகழ்ந்துள்ளனர். இத்தகவலை அடிப்படையாக கொண்டு, விசாரணை செய்து மூவர் மீதும் போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனில், சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அவர்களின் வீடுகளிலிருந்து மொபைல் போன்கள், சிம்கார்டுகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், வங்கிகணக்கு ஆவணங்கள், பென் டிரைவ்கள், மெமரி கார்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்,பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாநகர போலீஸ் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment