Friday, May 24, 2019

தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடத்தில் வெற்றி: பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

தமிழகம், புதுவை என 39 மக்களவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதியில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது. அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி மற்றும் மே 19ம் தேதி நடந்து முடிந்தது.
அதன்படி, 38 மக்களவை தொகுதியில் மட்டும் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 64 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் களத்தில் இருந்தனர்.அதேபோன்று 22

சட்டப்பேரவை தொகுதியில் 406 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 33 பேர் பெண்கள் ஆவர். 38 மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் இடையே தான் பெரிய அளவில் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு அடுத்து டி.டி.வி.தினகரனின் அமமுக, கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி.தினகரன், கமலஹாசன், சீமான் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் மட்டுமன்றி பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா மற்றும் அமித்ஷா உள்ளிட்ட அகில இந்திய கட்சி தலைவர்களும் கடந்த இரண்டு மாதம் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தது.

நேற்று காலை 8 மணிக்கு நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்திலும் வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணிக்கு தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு வாக்குப்பெட்டி இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஒவ்வொரு மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 45 மையங்களிலும் 88 அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணும் இடங்கள் அனைத்திலும் துணை ராணுவ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2வது, 3வது கட்டமாக மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்ற வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்கள் முறையான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 7 மணிக்கு பிறகு உள்ளே வந்தவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்கில் எல்லா தொகுதியிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர்.

காலை 8.30 மணிக்கு வாக்குப்பெட்டி இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தமிழகத்தை மத்திய சென்னை, வடசென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், பெரும்புதூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, அரக்கோணம், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தென்காசி, தஞ்சை உள்ளிட்ட 37 தொகுதிகளிலும், புதுவையில் காங்கிரசும் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தனர்.தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் நேற்று இரவு 9 மணிக்கு 50 ஆயிரம் வாக்குகள் முன்னணியில் இருந்தார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவனும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரும் மாறி மாறி முன்னிலை பெற்றனர். இறுதியில் திருமாவளவன் 3,188 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆனால் மற்ற தொகுதியில் குறைந்தது ஒரு லட்சம் ஓட்டுக்கள் முதல் 4 லட்சத்துக்கு மேல் திமுக கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற்றனர். சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூரைப் பொறுத்தவரை அனைத்து திமுக வேட்பாளர்களுமே 2 லட்சம் முதல், 4.61 லட்சம் வாக்குகள் வரை முன்னிலையில் வெற்றி பெற்றனர். அதில் சென்னையைப் பொறுத்தவரை மத்திய சென்னையில் தயாநிதி மாறன் 3 லட்சத்து 1520 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4.61 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் 2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதேபோலதான் தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

நெருங்க முடியாத ஓட்டு வித்தியாசம்
 
தமிழகம், புதுவையில் 39 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அதில் 38ல் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. அதில் சிதம்பரம் தொகுதியில் மட்டுமே குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலையில் இருந்தார். மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் லட்சக்கணக்கான வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். அதில் அதிமுக மற்றும் அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அமமுக ஆகிய 2 கட்சிகளின் ஓட்டுக்களை சேர்த்தால் கூட, ஒரு தொகுதியில் கூட திமுகவின் வெற்றியை நெருங்க முடியாத நிலைதான் உருவாகியிருந்தது. இதனால் திமுக வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment