Sunday, March 5, 2017

நாகை மீனவர்கள் எட்டு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்!

நாகப்பட்டினம், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த, நாகை மீனவர்கள் எட்டு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்; இலங்கை கடற்படையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவுகிறது.

நாகையைச் சேர்ந்த மீனவர்கள், எட்டு பேர், கடந்த 1ம் தேதி, மீன் பிடிப்பதற்காக கடலுக்கு புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு, கோடியக்கரைக்கு தென்கிழக்கே, 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
 இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, தங்களை தாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள், இந்திய கடலில் தங்களை சுதந்திரமாக தொழில் செய்ய விடுமாறு, இலங்கை கடற்படையினரிடம் தெரிவித்தனர்.

அப்போது, இலங்கை கடற்படையினரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்தோஷ், 30, என்ற மீனவர், படகில் இருந்த பாட்டிலை உடைத்து, தன்னை குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆவேசமடைந்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த மீனவர்களை கைது செய்து, இலங்கை திரிகோணமலைக்கு அழைத்துச் சென்றனர்.

உயிருக்கு போராடிய மீனவரை, திரிகோணமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சக மீனவர்கள், ஏழு பேரையும், அந்நாட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
கடந்த, மூன்று நாட்களில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, நான்கு படகுகளை பறிமுதல் செய்து, 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது, மீனவர்கள் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment