Monday, March 27, 2017

ராஜிவ் கொலை குற்றவாளி முருகனிடமிருந்து 2 மொபைல்போன்கள் பறிமுதல்!

வேலூர் : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளியான முருகனிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்கள், மூன்று சிம் கார்டுகள், சார்ஜர்களை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மொபைல் போன்கள் பறிமுதல் :



ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருபவர் முருகன். இவர், மற்றொரு குற்றவாளியான நளினியின் கணவர் ஆவார். இவர்கள் இருவரும் தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சிறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது முருகனின் அறையில் இருந்த சுவாமி படங்களுக்கு பின் மறைத்து வைக்கப்பட்டிருந்த, இரண்டு மொபைல் போன்கள், மூன்று சிம் கார்டுகள், சார்ஜர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சலுகைகள் ரத்து :

அதிக பாதுகாப்பு நிறைந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக்கில் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைக்குள் வைத்திருந்தது தொடர்பாக முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறை கேன்டீனில் இருந்து தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பது உள்ளிட்ட முருகனுக்கு அளிக்கப்பட்டிருந்த சில சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக தொடருது :

மொபைல் போன்கள், சிம் கார்டுகள் எப்படி கிடைத்தது என முருகனிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. யார் உதவியுடன் அப்பொருட்களை கிடைத்தது என கூற முருகன் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் காரணமாக முருகனுக்கு வாரத்திற்கு ஒருமுறை தனது மனைவி நளினியை சந்திப்பதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியும் மறுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 2010 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நளினியின் சிறை அறையில் இருந்தும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் சரவணன் என்ற ரவுடி அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்தும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறை காவலர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் நிறைந்தது என கூறப்படும் வேலூர் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாகி வருவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  

No comments:

Post a Comment