Tuesday, December 6, 2016

முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது.
அப்பல்லோ மருத்துவமனை சார்பில்வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி காய்ச்சல், மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கிரிட்டிக்கல் கேர் யூனிட் பிரிவில் பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் உடல் நலம் தேறி சாதாரணமாக வாய்மூலம் உணவு உட்கொள்ளும் அளவிற்கு முன்னேறினார். இதன் அடிப்படை
யில் அவர் கிரிட்டிக்கல் கேர் பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார்.
 
அங்கும் அவருக்கு சிறந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை நன்கு தேறி வந்தது.
துரதிஷ்டவசமாக டிசம்பர் 4ம் தேதி மாலை அவருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர் இன்டென்சிவ் கேர் பிரிவிற்கு மாற்றப்பட்டு அவர் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. உலக அளவில் அளிக்கப்படும் ஒரு சிறந்த சிகிச்சைதான் எக்மோ சிகிச்சை அவருடைய உயிரை காப்பாற்ற இயன்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் அவர்கள் உடல் நிலை மிகவும் மோசமடைந்து 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது...
 
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வும் அரசியலும்!!
 

தமிழக முதல்வர்  ஜெ. ஜெயலலிதா கர்நாடகாவில் உள்ள  மாண்டியா மாவட்டத்தில், பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் ஜெயராம் – வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார்.
jeya4

பெங்களூரில் ஜெயலலிதா பிஷப் கார்ட்டன் பெண்கள் உயர்நிலைப்  பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்..
jeya-3

ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிருக்கும் ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.
1981ல் அ.தி.முக. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். எம் ஜி ஆரின்  மறைவுக்குப் பின் அதிமுக ஜானகி அணி, ஜெயல்லிதா அணி என் இரண்டாக பிரிந்தது. தேர்தல் தோல்விக்கு பின் 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
 
இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.  2016 இல் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். எம் ஜி ஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார்.
jeya-5

1991 முதல் 1996 வரையிலான  ஆட்சியின் மீது பல  ஊழல் வழக்குகளும், வளர்ப்பு மகன் திருமணம் என குற்றசாட்டுகளும் முன் வைக்கப்பட்டன,  அதற்கான வழக்குகளை அவர் இன்னும் எதிர்கொள்கிறார்.
கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும், அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தர்மபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர்.
 
ஜெயலலிதா முதல் முறையாக  தமிழக முதல்வராக இருந்த (1991-1996) போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது. அதேபோல  1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
jeya-2

தமிழ்நாட்டில் 2001 ஆம் ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என இருந்த பாலின சதவிகிதம் 2011 ஆம் ஆண்டில் 946 ஆக அதிகரித்துள்ளது. தொட்டில் குழந்தைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தை விகிதங்கள் அதிகரித்துள்ளது.
 
2011 ஆம் ஆண்டு மிண்டும் ஜெயல்லிதா முதல்வராக வந்த பின்  மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்துள்ள கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தொட்டில் குழந்தைத் திட்டம் விரிவாக்கம் செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
2004 ஆம் ஆண்டு  நவம்பர் 11 ஆம் தேதி  ஜெயலலிதா  முதல்வராகவும் காவல்துறை அமைச்சராகவும் இருந்த போது இந்தியாவின் எல்லா  அதிகார மையங்களோடு குடியரசு தலைவர் அமைச்சர்கள் வரை வந்து சந்தித்து செல்லும் அதிகாரோத்தோடு இருந்த காஞ்சுபுரம் ஜெயேந்திரை  சங்கர்ராமன் கொலை வழக்கில் கைது செய்தது  மிக துணிச்சலான  முடிவாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து இடஒதிக்கீட்டிற்கான போராட்டங்கள் நடத்தி இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் 69 சதவித இடஒதிக்கீடு இருக்கிறது.
 
50 சதவித்திற்கு மேல் இட ஒதிக்கீடு  இருக்ககூடாது என  உச்சநீதி மன்றம் தீர்ப்பு கொண்டு வந்தபோது   69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையைப் பாதுகாத்திட 1993 ஆம் ஆண்டு, ஜெயலலிதா அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசியல் சட்டத்தின் 31சி பிரிவின் கீழ் சட்டம் கொண்டு வந்தது. பின்னர் மத்திய அரசு இதனை அரசியல் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்த்து இதுவும் இவரின் அரசியல் வாழ்வில் முக்கியமானதாக  கருதப்படுகிறது.
 
செப்., 22 முதல் டிச., 5 வரை...

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில், 74 நாட்களாக, சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று (டிச.,4) மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவரை, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா செப்., 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை மேற்கொண்ட சிகிச்சை விபரங்களை இங்கு பார்ப்போம்:
ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை...
2016 செப்., 22; காய்ச்சல், நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.
2016 செப்., 23: முதல் மருத்துவ அறிக்கையை அப்பல்லோ வெளியி்ட்டது. உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்.
செப்., 24: சாதாரண உணவுகளை ஜெயலலிதா உட்கொள்வதாக தகவல்.
செப்., 25: ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என்பது போன்ற தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
செப்., 27 : காவிரி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் உடன் நடந்ததாக தகவல் வெளியீடு.
செப்., 29: ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது, அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
அக்., 2: லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை.
அக்., 3: ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோயை சரிசெய்ய, ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டதுடன், சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது.
அக்., 4: ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை தொடர்வதாகவும் தகவல்.
அக்., 6: டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வந்து லண்டன் டாக்டர், அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆலோசனை.
அக்., 8: நுரையீரலில் இருக்கும் நீரை நீக்க சிகிச்சை.
அக்., 10: சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் வந்து உடற்பயிற்சி அளிக்க தொடங்கினர். அதே நாளில், டில்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் மீண்டும் அப்பல்லோ வந்தனர்.
அக்., 21: தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர்களின் தலைமையில் இதயநோய், நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை.
நவ., 14: அ.தி.மு.க., மூத்த உறுப்பினர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு, அவரது மகனிடம் ஜெ., தொலைபேசியில் இரங்கல் தெரிவி்ததார்.
நவ., 19: தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு ஜெயலலிதா மாற்றம். தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.
நவ., 22: மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதையடுத்து ஜெ., மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
டிச., 4: ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை .வெளியீடு.
டிச., 5: ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துமனை அறிக்கை.
டிச., 5:முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது.
 

No comments:

Post a Comment