Wednesday, September 30, 2015

உள்நாட்டு விசாரணை நடத்தஇலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு!

Wednesday, September 30, 2015
நியூயார்க், :இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, உள்நாட்டு விசாரணை நடத்த ஆதரவளிப்பதாக, இலங்கை அரசிடம், அமெரிக்கா கூறியுள்ளது.
 
கடந்த வாரம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்தின், ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைக் குழு கூட்டம் நடந்தது. அப்போது, 'இலங்கை உள்நாட்டு போரில் நிகழ்ந்த, மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை, இலங்கை அரசு தெரிவு செய்யும், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் பங்கேற்புடன், விசாரிக்க வேண்டும்' என, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
 
இதற்கு மாறாக, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென, ஐ.நா., மனித உரிமைகள் குழு தலைவர் ஸீத் ராட் அல் ஹுசேன் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
 
இதையடுத்து, உள்நாட்டு விசாரணை நடத்தும் வகையில், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற, இலங்கை அரசு, முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில், ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேன, இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியை, நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசு, ஜனநாயக சுதந்திரத்தை மீண்டும் ஏற்படுத்தும் வகையில், துணிச்சலுடன் எடுத்து வரும் நடவடிக்கைகளை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பாராட்டினார். இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நீதி கிடைக்க, உள்நாட்டு விசாரணை மேற்கொள்வதற்கு, அமெரிக்கா ஆதரவளிக்கும் என, கெர்ரி உறுதியளித்தார்.இவ்வாறு ஜான் கிர்பி கூறினார்.

No comments:

Post a Comment