Thursday, September 17, 2015

இலங்கை விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை: மத்திய அரசு தலையிட தமிழக சட்டசபையில் தீர்மானம்}

Thursday, September 17, 2015
சென்னை: இலங்கை இனப்படுகொலை குறித்து, சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் இந்தியா கொண்டு வர வேண்டும். இலங்கைக்கு ஆதரவான அமெரிக்க தீர்மானத்தை ராஜதந்திர ரீதியில் தோற்கடிக்க வேண்டும்' என, சட்டசபையில் நேற்று, முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசை வலியுறுத்தினார்.
 
இதை, அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டன; எனவே தீர்மானம், ஏகமனதாக நிறைவேறியது.
சட்டசபையில், முதல்வர் கொண்டு வந்த தீர்மானம்:
 
இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது, நடந்த இனப் படுகொலைகள் குறித்து, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என, உலகம் முழுவதும் குரல்கள் எழுப்பப்படுகின்றன. கடந்த, 2013ல் நடந்த ஐ.நா., சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
செவிசாய்க்கவில்லை:
 
'இந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தோம். ஆனால், அப்போதைய மத்திய அரசு, இதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது, நிலைமை தலைகீழாக மாறி
விட்டது. இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்கா, இப்போது இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வருகிறது.'இலங்கை போர் குற்றங்களுக்கு உள்நாட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம்' என, அத்தீர்மானம் உள்ளதாக, அமெரிக்க வெளியுறவு செயலர் தெரிவித்து உள்ளார்.இலங்கை வடக்கு மாகாண சபையில், 'போர் குற்றங்களுக்கு எதிரான விசாரணையை, இலங்கை நடத்தினால் நீதி கிடைக்காது' என, தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
உள்நாட்டு போர்:
 
எனவே, கடந்த, 14ம் தேதி துவங்கி, அக்., 2ம் தேதி வரை நடக்கும், ஐ.நா., சபை மனித உரிமைக் குழு கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும்.இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது, சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தை மீறி இனப் படுகொலை நடத்தி
உள்ளனர். இவர்கள் மீது சர்வதேச விசாரணை நடத்தும் வகையில், வலுவான தீர்மானத்தை ஐ.நா., சபையில் கொண்டு வர வேண்டும்.
ராஜதந்திரம்:
 
இந்த தீர்மானத்தை, அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் இணைந்து, இந்தியா கொண்டு வரவேண்டும். இலங்கைக்கு ஆதரவான நிலையை அமெரிக்கா எடுத்தால், அதை மாற்ற ராஜதந்திர ரீதியில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுஉள்ளது.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் என, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனை வரும், இத்தீர்மானத்தை முழுமையாக ஆதரித்தனர்.இதையடுத்து, ஒருமித்த கருத்தோடு சட்டசபையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment