Friday, September 25, 2015

சுயாதீனத் தொலைக்காட்சி விளம்பரக் கட்டணம் செலுத்தாமை குறித்து மைத்திரியிடம் கேட்க வேண்டும் : மஹிந்த பதில்!

Friday, September 25, 2015
சுயாதீனத் தொலைக்காட்சி சேவைக்கு விளம்பரக் கட்டணம் செலுத்தப்படாமை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமே கேட்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடமையாற்றி வருகின்றார் என்பது குறிபிடத்தக்கது.

பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடாபிலான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்றைய தினம், முன்னாள் ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தியிருந்தனர்.

நான்கு அதிகாரிகள் சுமார் ஒரு மணித்தியாலம் இவ்வாறு விசாரணை நடத்தியிருந்தனர்.இந்த விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, கட்சியின் சார்பில் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.



எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பிரச்சாரப் பணிகளுக்கான நிலுவைப் பணத்தைச செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.சுமார் பதினொரு மில்லியன் ரூபா கட்டண நிலுவை அரச தொலைக்காட்சி சேவையான சுயாதீன தொலைக்காட்சிக்கு செலுத்தப்பட வேண்டியுள்ளது.

இது தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அதன் ஓர் கட்டமாக நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

தனிப்பட்ட ரீதியில் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக தாம் போட்டியிட்ட காரணத்தினால் பிரச்சார விளம்பர கட்டணங்கள் செலுத்த வேண்டியிருந்தால் அது குறித்து கட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்புமாறு அதிகாரிடம் தாம் கோரியதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment