Thursday, September 24, 2015

பேஸ்புக்கில் ஜெ,வை கலாய்த்த ஸ்டாலின்:-ஸ்டாலினின் முகநூல் பதிவு?முதல்வர் ஜெயலலிதா கேள்வி!

 Thursday, September 24, 2015
சென்னை : பேஸ்புக்கில் ஸ்டாலின் வெளியிடுவது எல்லாம் அவரது சொந்த கருத்துக்கள் தானா என அவர் விளக்கிட வேண்டும்" என முதல்வர் ஜெயலலிதா கேட்டுள்ளதற்கு, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ள ஸ்டாலின், ''எனது பேஸ்புக் பக்கத்தை முதல்வர் தொடர்ந்து பார்ப்பதற்கு நன்றி. தொடர்ந்து என் பக்கத்தை பார்த்து, அதில் நான் பதிவு செய்து வரும் மக்களின் பிரச்னைகளை, தேவைகளை, குறைகளை முதல்வர் தெரிந்து கொள்ளட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நேற்று (செப்.,22) நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, "தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களை ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் திரித்து கூறி வருகிறார் உண்மையில் அது அவரது கருத்துக்கள் தானா என்பதை அவர் விளக்கிட வேண்டும். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் தனது பேஸ்புக்கில் வாழ்த்து கூறி இருந்தார். பின்னர் அது அவரது கருத்து இல்லை, ஸ்டாலினின் பேஸ்புக் பக்கத்தை பராமரிப்பவர்கள் வெளியிட்டது என திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது" என்றார்.
 
சட்டசபையில் முதல்வர் கூறிய கருத்திற்கு பேஸ்புக்கில் பதிலளித்துள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின், " தமிழகத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து என் முகநூலில் சொல்லப்பட்டுள்ள புள்ளிவிவரங்களை மறுத்திருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த புள்ளிவிவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் வெளியிடப்பட்டவை. ஆகவே அந்த புள்ளிவிவரங்கள் பற்றி தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம் அவர் கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
 
எனினும் என்னுடைய முகநூல் பக்கத்தை முதலமைச்சர் தொடர்ந்து பார்த்து வருவதற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் அவரது கணிணி மூலம் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுபயணம் செய்து மக்களின் உணர்வுகளை, அவர்களது ஏமாற்றங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் செல்லும் "நமக்கு நாமே" பயணத்தின் வீடியோக்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் என் முகநூலில் பதிவு செய்து வருகிறேன். ஆகவே என் முகநூல் செய்திகளை முதலமைச்சர் தொடர்ந்து படித்தால் மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், கனவுகளை தெரிந்து கொள்ள முடியும்.

முதலமைச்சரால் மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ள பொறுப்புணர்வோடு கூடிய அக்கறையில்லை என்றாலும், தமிழக மக்களின் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ள எனது முகநூல் பக்கம் அவருக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
 
ஸ்டாலினின் முகநூல் பதிவு?முதல்வர் ஜெயலலிதா கேள்வி!
 
சென்னை:''தி.மு.க., சட்டசபை தலைவர் ஸ்டாலினின், முகநுாலில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகள், அவர் கருத்து தானா என்பதை, அவர் விளக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்தும், போலீசாரின் செயல்பாடு குறித்தும், எதிர்மறை கருத்துகளை சிலர் எடுத்துக் கூறினர். பிரங்க் ஹெர்பெர்ட் என்ற அமெரிக்க அரசியல்வாதி, 'விவதத்தின் குறிக்கோள், உண்மை நிலையை மாற்றுவதாகும்' என்றார்.

அந்த அடிப்படையில், உண்மையை திரித்து விடலாம்; உண்மையை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தில், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து, உண்மைக்கு மாறான விமர்சனங்களை, சிலர் தங்கள் பேச்சு மூலமாகவும், சிலர் அறிக்கை மூலமாகவும், சிலர் முகநுால் பதிவு மூலமாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.தி.மு.க., சட்டசபை தலைவர் ஸ்டாலின், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து, முகநுாலில் சில கருத்துகளை பதிவு செய்துள்ளார். அவை உண்மையிலே, அவரது கருத்து தானா என்பதை, அவர் விளக்க வேண்டியது அவசியம்.

கடந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தியின் போது, ஸ்டாலின் முகநுால் பதிவின் மூலம், வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், தி.மு.க., தலைமை கழகம், அதற்கு மறுப்பு தெரிவித்து, 'ஸ்டாலின் இணையதளத்தை பராமரிக்கும் சில தோழர்கள் வெளியிட்டு உள்ளனர்; இந்த வாழ்த்துச் செய்தி, ஸ்டாலின் விருப்பப்படி ஆனதில்லை' என, தெரிவித்து, ஒரு விளக்கத்தை அளித்தது.
எனவே, சட்டம் - ஒழுங்கு குறித்து, ஸ்டாலின் முகநுாலில் வெளிவந்த பதிவுகளும், மற்றவர்களின் கருத்து தானோ, என்னவோ?
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment