Saturday, September 26, 2015

இலங்கை போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அமெரிக்கா வரைவு தீர்மானம் தாக்கல்!

Saturday, September 26, 2015
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து, சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்பில், உள்நாட்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அமெரிக்கா வரைவு தீர்மானம் தாக்கல் செய்துள்ளது.

இதை இலங்கை, பிரிட்டன், மாசிடோனியா, மான்டிநீக்ரோ ஆகிய நாடுகள் வழிமொழிந்துள்ளன. இலங்கையில், 2009ல் புலிகளுடன் நடந்த இறுதிப் போரில்,பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணை அறிக்கையை, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன், சென்ற வாரம் வெளியிட்டது. அதில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச நீதிபதிகளுடன், கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

ஆனால், அதை ஏற்க மறுத்த இலங்கை அரசு, அடுத்த ஆண்டு ஜனவரியில், உள்நாட்டு விசாரணை துவக்கப்படும் என, அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன், இலங்கை நீதித் துறையின் கீழ், விசாரணை மேற்கொள்ளும் வரைவு தீர்மானத்தை, ஐ.நா., மனித உரிமை கமிஷனில் தாக்கல் செய்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
 
இலங்கை போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் நம்பகமான முறையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அதில், ஒருமைப்பாடு மற்றும் பாரபட்சமற்ற தனிநபர்களின் வழக்காடு நிறுவனங்கள், சுதந்திரமான வழக்கறிஞர்கள், காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த சிறப்பு வழக்கறிஞர்கள், அயல்நாட்டு நீதிபதிகள், அங்கீகரிக்கப்பட்ட எதிர்தரப்பு வழக்கறிஞர்கள், விசாரணை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திருத்தங்களுக்குப் பின்னரே, இந்த வரைவு தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அடுத்த வாரம், இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறும் வரை, மேலும் திருத்தங்கள் செய்யவும் வாய்ப்புள்ளது.

சர்வதேச சட்ட வல்லுனர்கள் பங்கேற்புடன் விசாரணை நடத்த, அமெரிக்காவின் வரைவு தீர்மானம் வலியுறுத்துகிறது. இலங்கை நீதித் துறை, நம்பகமான அமைப்பாக மாற, இத்தீர்மானம் முக்கிய அடையாளமாகத் திகழும். இது, இலங்கையில் அமைதி, நீதி, மக்கள் நல்வாழ்வுக்கு துணைபுரியும்.

ஜான் கெர்ரி மெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்
காமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகள், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் விசாரணை நடைபெற வேண்டும் என, தீர்மானம் வலியுறுத்துகிறது. இது
வரவேற்கத்தக்கது.

No comments:

Post a Comment