Tuesday, September 1, 2015

கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் இதுவரை நடத்திய விசாரணைகளுக்கமைய அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட வில்லை. சட்டமா அதிபர் திணைக்களம்!

Tuesday, September 01, 2015
கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் இதுவரை நடத்திய விசாரணைகளுக்கமைய அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட வில்லையென சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

கே.பியை கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான வழக்கு விசாரணை நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போதே சட்டமா அதிபர் சார்பில் மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டது.

புலிகளின் தலைவராக விருந்த கே.பிக்கு எதிராக 193 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குமரன் பத்மநாதன் குற்றவாளியாக அடையாளம் காணப்படவில்லை. இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு ஒக்டோபர் 28ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த உதவி சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கு அனுமதி வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட, அன்றையதினம் விசாரணை அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கில் பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

எல்.ரி.ரி.ஈ.யின் சர்வதேசத் தலைவராக விருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்நமாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவரை கைதுசெய்து, சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வி.பி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான சுனில் வட்டகல மற்றும் உபுல் குமார ஆகியோர் ஆஜராகி யிருந்தனர்.

கே.பி தொடர்பில் முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பித்திருக்காத சட்டமா அதிபர் திணைக்களம், இதுவரை நடத்திய விசாரணைகளுக்கு அமைய கே.பி குற்றவாளியாக அடையாளம் காணப்படவில்லையெனக் கூறியுள்ளனர்.

விரிவான அறிக்கையை தாம் எதிர்பார்த் திருப்பதாக சுனில் வட்டகல கூறினார்.

நீதிமன்றத்தில் தீர்வொன்று கிடைக்காவிட்டால் இதுவிடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
 

No comments:

Post a Comment