Friday, September 18, 2015

இலங்கை இறுதிப்போரில் இருதரப்பிலும் மனித உரிமை மீறல்'! ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் விசாரணை அறிக்கையில்!

ஜெனீவா: இலங்கையில்,  புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே, 2009ல் நடைபெற்ற இறுதிப்போரில், ராணுவமும், விடுதலைப்புலிகளும் போர்க் குற்றம் புரிந்துள்ளதாக, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போர்க்குற்றங்கள் குறித்து, சர்வதேச நீதிபதிகள் கொண்ட தனி கோர்ட் அமைத்து, விசாரணை நடத்த வேண்டும் எனவும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

300 பக்க அறிக்கை :
 
இலங்கை இறுதிப் போர் குறித்து, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனின் விசாரணைக் குழு, இரண்டு பாகங்கள் கொண்ட, 300 பக்க அறிக்கையை தயாரித்துள்ளது.இந்த அறிக்கையை, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் செயல்படும், ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் ஆணையர் ஜெய்த் ராத் அல் - உசேன் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

இலங்கை இறுதிப்போரில், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. இது, மனித உரிமை மீறல் குறித்த ஆய்வு தானே தவிர, கிரிமினல் குற்றங்கள் தொடர்பான புலனாய்வு அல்ல.இந்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கையின் புதிய அரசு, நடவடிக்கை எடுக்கும் என, கமிஷன் நம்புகிறது.

இறுதிப்போரில், இலங்கை ராணுவம்,புலிகள் என, இரு தரப்பிலும், போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. எனவே, இலங்கை அரசு, சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய தனி நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரை மறுகுடியமர்த்துவது உட்பட, பாதுகாப்பு மற்றும் நீதித்துறை செயல்பாடுகளில், அடிப்படை சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். குற்றம் புரிந்த ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், உயிர் தப்பிய புலிகள் இயக்கத்தினர் ஆகியோர் தண்டனையில் இருந்து தப்பியுள்ளனர். இதற்கு முடிவு கட்ட, அரசியல் மற்றும் பிற நடவடிக்கைகள் சார்ந்த, ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும்.

புலிகள் செய்த கொடுமைகள்:
 
புலிகள், சிறுவர்களையும், இளைஞர்களையும், போர்முனைக்கு செல்ல கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மேலும்,

புலிகள், அரசு அதிகாரிகள், தங்களுக்கு எதிரான தமிழ் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரை தற்கொலைப் படை தாக்குதல், கண்ணி வெடிகளின் மூலம் கொன்றுள்ளனர்.

குறிப்பாக, சிறுவர்களை, போரில் பயன்படுத்தியுள்ளனர். இது, போர்க்குற்றமாகும். இறுதிப்போரில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராணுவம்
 
* இலங்கை போரில், தடை செய்யப்பட்ட பகுதியில், ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அப்பாவி பொதுமக்கள்,  அரசியல்வாதிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர்
கொல்லப்பட்டுள்ளனர்
* புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட, மக்கள் அதிகம் வசித்த இடங்களை, குண்டு வீச தடை செய்யப்பட்ட பகுதியாக இலங்கை அரசு அறிவித்திருந்தது

* ஆனால், ராணுவத்தினர் தொடர்ந்து அப்பகுதிகளில்  குண்டு வீசி தாக்கியுள்ளனர்; இந்த குண்டுவீச்சில், தங்களின் உறவினர்கள் உயிரிழந்ததை கண்டதாக, உயிர் தப்பிய பலர் வேதனையுடன் விவரித்துள்ளனர்

* அரசு அமைப்புகளின் தவறான செயல்பாடுகளை சிறிதும் குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக, ராணுவத்தினரின் குற்றங்களை கண்டறிந்து விசாரிக்கும் நடைமுறை, மிகவும் பலவீனமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment