Friday, August 14, 2015

பொதுச்செயலாளர்கள் பதவியிலிருந்து அனுர, சுசில் நீக்கம்!

Friday, August 14, 2015
 ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அனுர பிரியதர்ஷன யாப்பாவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி யாப்புக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச்செயலாளராக பேராசிரியர் விஷ்வா வர்ணபாலவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த பதவிகளில் தடையின்றி செயற்படுவதற்கு இடமளிக்குமாறு கோரி துமிந்த திஸாநாயக்க மற்றும் விஷ்வா வர்ணபால ஆகி​யோர் நீதிமன்றத்தில் இன்று வேண்டுகோள் விடுத்தபோதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. துமிந்த திஸாநாயக்க மற்றும் போராசிரியர் விஷ்வா வர்ணபால ஆகியோர் அந்த பதவிகளில் தடையின்றி செயற்படுவதற்கு இடமளிக்குமாறும்
 
அவர்களது நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு இரண்டு இடைக்கால தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன இந்த இரண்டு தடை உத்தரவுகளும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனவும் வழக்கு விசாரணை அன்றைய தினம் இடம்பெறும் எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment