Sunday, August 23, 2015

தேசிய அரசாங்கத்தில் இணைவதற்காக நிபந்தனைகளுடனான சுதந்திர கட்சியின் யோசனைக்கு பிரதமர் இணக்கம்!

Sunday, August 23, 2015
தேசிய அரசாங்கத்தில் இணைவதற்காக நிபந்தனைகளுடனான சிறிலங்கா சுதந்திர கட்சியின் யோசனைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கடந்த தினம் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழுவில், தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனைகளை தயாரிப்பதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான இந்த குழுவில் 6 பேர் அங்கம் வகித்தனர்.

இந்த குழு தயாரித்த யோசனை, பிரதமர் ரணில் விக்ரசிங்கவிடம் கடந்த தினம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச - தனியார் ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களின் போது, அரச நிறுவனங்களை முழுமையாக தனியார் மயப்படுத்தக் கூடாது என்பது, இந்த யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ள முதலாவது விடயமாகும்.

சுதந்திர கல்வி மற்றும் சுகாதார சேவைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அமைச்சரவையை பகிரும் போது, சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் பிரதான அமைச்சுக்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுக்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் இறுதி தீர்மானம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
           

No comments:

Post a Comment