Monday, August 24, 2015

மரண தண்டனை விதிக்கும் நடைமுறை ரத்தாகுமா? சட்ட கமிஷன் இந்த வாரம் அறிக்கை!!

Monday, August 24, 2015
புதுடில்லி: உலக நாடுகள் பலவற்றில், ரத்து செய்யப்பட்டுள்ள துாக்கு தண்டனைக்கு, இந்தியாவிலும் விடை கொடுக்கப்படுமா என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கும் நிலையில், அது தொடர்பான அறிக்கையை, மத்திய சட்டக் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டிடம் இந்த வாரம் வழங்க உள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட, 'சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்' யாகூப் மேமனுக்கு, சமீபத்தில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டபோது, நாடு முழுவதும் விவாதம் கிளம்பியது. 'இந்த நாகரிக சமுதாய காலத்திலும், கொடூர குற்றம் புரிந்தவர்களை, அரசே கொலை செய்வதா?' என, ஒருசாராரும், 'கொடூர குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை தான், சரியான தண்டனையாக இருக்கும்' என, துாக்கு தண்டனைக்கு ஆதரவான மற்றொரு தரப்பினரும் வாதிட்டனர்.

எனினும், நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே, துாக்கு தண்டனையை பின்பற்ற வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்த விவாதம் துவங்கிவிட்டது.அதன்படி, மத்திய சட்டத் துறையின் கீழ் செயல்படும் சட்டக் கமிஷனிடம், துாக்கு தண்டனையை தொடர்ந்து பின்பற்றுவதா? வேண்டாமா? என்பது குறித்து, அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை செய்து அறிக்கை அளிக்குமாறு, மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

அது தொடர்பான சட்டக் கமிஷனின், மூன்றாண்டு பதவிக்காலம், இந்த மாத இறுதியில் நிறைவடைய உள்ள நிலையில், துாக்கு தண்டனை குறித்த அறிக்கை, சுப்ரீம் கோர்ட்டிடமும், மத்திய சட்டத் துறையிடமும், இந்த வாரம் வழங்கப்பட உள்ளது.அதில் சட்டத் துறை மேற்கொள்ளும் திருத்தங்களின் படி, வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, மசோதா இறுதி செய்யப்படும். அதன்பின், பார்லிமென்டின் இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்.
உலக நாடுகளின் நிலவரம்:
*எத்தகைய கடுமையான குற்றங்களுக்கும், மரண தண்டனை விதிப்பதில்லை என, 102 நாடுகள், மரண தண்டனையை ரத்து செய்துள்ளன.
* ஏழு நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன; ஆனால், சில கொடூரமான குற்றங்களுக்கு, மரண தண்டனை வழங்கப்படுகிறது.
* ரத்து செய்த நாடுகளில், 50 நாடுகளில், மீண்டும் பின்பற்றப்படுகிறது. எனினும், கடந்த 10 ஆண்டுகளாக, தண்டனை விதிக்கப்படவில்லை.
* ரத்து செய்த நாடுகளில், 36 நாடுகள், மீண்டும் பின்பற்றி வருகின்றன.
கூடவே கூடாது:கலாம் கருத்து:
 
துாக்கு தண்டனை கூடவே கூடாது என, மறைந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி போன்றோர், சட்டக் கமிஷனில் விளக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.இதற்கு மாறாக, சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த, துஷ்யந்த் தவே, துாக்கு தண்டனை அவசியம் என, சட்டக் கமிஷனில் அறிக்கை
அளித்துள்ளார்.துாக்கு தண்டனைக்கு எதிராக, குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் பலர், 'உயிரை பறிக்கும் தண்டனை விவகாரத்தில், உணர்ச்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது; நிதானமாக சிந்தித்து, தக்க முடிவு எடுக்க வேண்டும்' என, தெரிவித்து உள்ளனர்.

விவாதத்திற்கு பின் விளக்கமான அறிக்கை:
* சந்தோஷ்குமார் சதிஷ் பூஷன் பாரியார் மற்றும் மகாராஷ்டிர அரசு, கிஷன்ராவ் காடே மற்றும் மகாராஷ்டிர அரசு சம்பந்தப்பட்ட, இரு வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சட்டக் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில், 'துாக்கு தண்டனை குறித்து தெளிவான விவாதம் நடத்தி, அறிக்கை அளிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டது.
*மத்திய சட்டக் கமிஷனும், கடந்த ஆண்டு மே மாதம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், 'மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னை குறித்து, எம்.பி.,க்கள் மற்றும் சட்டத் துறை
வல்லுனர்களுடன் கலந்தாலோசனை நடத்தி, தக்க முடிவு காணப்பட வேண்டும்' என, தெரிவித்திருந்தது.
* துாக்கு தண்டனை விதிக்கப்பட கூடவே கூடாது என, வாதிடுபவர்கள் கூட, 'அரிதிலும் அரிதான குற்றங்களைச் செய்தவர்களுக்கு, துாக்கு தண்டனை தான், தக்க தண்டனையாக இருக்கும்; அத்தகையவர்களுக்கு, திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்படக் கூடாது' என, கருத்து தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு, மாறுபாடான கருத்துக்கள், துாக்கு தண்டனை விவகாரத்தில் நிலவுகின்றன.

No comments:

Post a Comment