Wednesday, July 22, 2015
நாட்டில் எழுபதாயிரம் இளைஞர் யுவதிகள் மரணமடைய காரணமாக இருந்தவர்களே இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பிரசாரக் கூட்டங்களில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மீது சுமத்தி வருகின்றார்.இந்நிலையில், வங்குரோத்து அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வரும் இப்படியான பொய் பிரசாரங்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
அடுத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்குமாயின் அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே கிடைக்கும். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கூட்டணிக்கு கிடைக்காது.
அதேவேளை ஷிராந்தி ராஜபக்சவின் சிறிலிய சவிய அமைப்பின் நிதியை பயன்படுத்தி கொழும்பு 5 பிரதேசத்தில் 35 மில்லியன் ரூபாவுக்கு வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாகவும் அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
இதற்கு முன்னரும் மக்கள் விடுதலை முன்னணி இப்படியான குற்றச்சாட்டை முன்வைத்தது. அப்போது நாம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் ஷிராந்தி ராஜபக்ச கடனில் பெற்ற பணத்திலேயே கொழும்பு 5இல் வீடொன்றை கொள்வனவு செய்ததாக மகிந்த ராஜபக்சவின் சொத்து விபரங்கள் தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளோம்.
சிறிலிய சவிய அமைப்பின் எந்தப் பணமும் இதற்கு பயன்படுத்தப்படவில்லை. ஏனைய குடும்பங்களை போல், ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொத்துக்கள் உள்ளன.இதனை தவிர சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத் தொடர்பு கோபுரங்களை பயன்படுத்தி வருவதாக அநுகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 7 தொலைத் தொடர்பு கோபுரங்கள் இருப்பதுடன் ஏனைய நிறுவனங்களின் கோபுரங்களை பயன்படுத்தும் தேவை கிடையாது.தேர்தலில் பொய்யால் வெல்லும் நோக்கிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள் வாயில் வந்த பொய்களை கூறி வருகின்றனர்.
நாட்டின் சுமார் 70 ஆயிரம் இளைஞர் யுவதிகளின் மரணத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய மற்றும் 20 ஆயிரம் மில்லியன் சொத்துக்களை சேதப்படுத்திய அமைப்பின் தலைவர்களே இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment