Wednesday, June 24, 2015

மஹிந்தவா அல்லது நிமலா பிரதமர் வேட்பாளர் என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா!

Wednesday, June 24, 2015
மஹிந்தவா அல்லது நிமலா பிரதமர் வேட்பாளர் என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இயங்குகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே உள்ளது.
 
இந்த நிலையில் கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் மத்திய குழுக் கூட்டமே கட்சியின் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ளும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற தீர்மானம் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு கட்சியின் தலைவரால் அறிவிக்கப்படும். இதில் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் மஹிந்தவா அல்லது நிமலா என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தமது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதை கூட்டணியின் ஒட்டுமொத்த முடிவாகவும் கருதுவது தவறானது. கட்சிக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கும் ஒரு குழுவினர் உள்ளனர். அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவும் மற்றொரு குழுவினர் உள்ளனர். அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களை கட்சிக் கூட்டத்தில் ஆராய்ந்து இறுதியில் ஒருமித்த தீர்மானத்துக்கு வரவேண்டும்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தமது கட்சியின் பெயரில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்த முடியும். அதை எம்மால் தடுக்க முடியாது. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பெயரில் இவர்கள் முரண்பாட்டுக் கருத்துக்களை முன்வைப்பது கட்சியின் விதிகளுக்கு முரணானதாகும். அதை கட்சி கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் எடுப்போம். அதேபோல் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த ஒருசிலர் முயற்சித்து வருகின்றனர்.
 
கட்சியை உடைப்பதற்காக மஹிந்த மைத்திரி முரண்பாட்டை தூண்டிவிட்டு அதனை சாதகமாக பயன்படுத்த எண்ணுகின்றனர். இதற்கு ஒருபோதும் நாம் இடம்கொடுக்க மாட்டோம். கட்சிக்குள் மஹிந்தவையும் ஜனாதிபதி மைத்திரியையும் ஒன்றிணைத்து தேர்தலில் முகம்கொடுக்க நாம் தயாராகி வருகின்றோம். அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். தொடர்ந்தும் ஜனாதிபதியுடனும் முன்னாள் ஜனாதிபதியுடனும் நாம் பேசி வருகின்றோம். சாதகமான பதிலை இரண்டு தரப்பில் இருந்தும் நாம் எதிர்பார்த்தே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.
ஆயினும் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நாம் இன்னும் கட்சிக்குள் ஆரம்பிக்கவில்லை. ஜனாதிபதி அதற்கான அனுமதியை இன்னும் வழங்கவில்லை. ஆகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை அரசாங்கம் அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கட்சி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் தேர்தல் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். தேர்தல் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி எமக்கு உறுதியளித்துள்ளார்.
 
19ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவந்ததைப்போல் 20ஆம் திருத்தமும் நிறைவேற்றப்படவேண்டும் என நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.ஆகவே அதற்கமைய ஜனாதிபதி எமக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நாம் நம்புகின்றோம். இந்நிலையில் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் நாம் குழப்பங்களை ஏற்படுத்த விரும்பவில்லை. என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment